சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் தமிழகத்தில் 2,379 கோயில் குளங்கள் உள்ளன. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் குளத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி மீன்கள் இறந்து மிதந்தன. கடந்த ஆண்டு ஜூன் மாதம், ராமநாதபுரம் திருஉத்தரகோசமங்கை கோயிலின் பிரம்ம தீர்த்தக்குளத்திலும், 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குளத்திலும் மீன்கள் இறந்தன.
இதேபோன்று கடந்த ஆண்டு நவ. 26-ம் தேதிகார்த்திகை தீபத் திருவிழாவின்போது சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபட்டனர். அன்று இரவு பெய்த கனமழை காரணமாக விளக்குகளில் இருந்தஎண்ணெய் கோயில் குளத்தில் கலந்தது. இந்நிலையில் அடுத்தநாள் அக்குளத்தில் ஏராளமான மீன்கள் இறந்து மிதந்தன.
அதனைத் தொடர்ந்து, மீன் வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, நீர் மற்றும் மீன் மாதிரிகளை சேகரித்து, மீன்வள பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுக்கு அனுப்பினர். தொடர்ந்து, மாநகராட்சி உதவியுடன் இறந்த மீன்கள் அகற்றப்பட்டன. இது தொடர்பாக நாளிதழ்களில் வந்த செய்திகள் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவுசெய்தது. “இது தொடர்பாக தமிழகஅரசு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். பக்தர்களின் மத நம்பிக்கையை பாதிக்காமல், கோயில் குளங்களில் மீன்கள் இறப்பதை தடுக்கும் ஆலோசனைகள் குறித்துஅறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து மீன்வளத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் “கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் சேகரிக்கப்பட்ட மீன் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்ததில் குளத்தில் எண்ணெயின் செறிவுஅதிகமாக இருந்தது. மேலும்அமோனியா செறிவு அனுமதிக்கப்பட்ட அளவை (0.01 பிபிஎம்) விடஅதிகமாக 1 பிபிஎம் அளவில் இருந்தது. இது மீன்கள் இறப்புக்கு காரணமாக இருந்தது” என குறிப்பிட்டி ருந்தது.
குளத்து நீரில் அமோனியா செறிவு அதிகமாக இருப்பதற்கான காரணங்கள் குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, குளத்தை முறையாக பராமரிக்காமல், பாசிகள் படர்ந்து, அவை அழுகினால் அமோனியா செறிவு அதிகரிக்கும். அது மீன்கள் இறப்பதற்கு காரணமாக அமையும்” என்றனர்.
இதற்கிடையில், இந்த வழக்கு பசுமை தீர்ப்பாய அமர்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.அப்போது, “கோயில் குளங்களில் மீன்கள் இறப்பதை தடுக்க, இந்துசமய அறநிலையத்துறை சார்பில்நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன” என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் ஜூலை 9-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே, இந்து சமய அறநிலையத்துறை சார்பில், அத்துறை அதிகாரிகளுக்கு நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் (SOP) அனுப்பப்பட்டுள்ளன. அதில் அறி வுறுத்தியிருப்பதாவது:
கோயில் குளங்களில் எண்ணெய் கலப்பது, மீன் செவுள்களை அடைப்பதன் மூலம் மீன்களின் சுவாச பாதையை பாதிக்கிறது. இது குளங்களில் உள்ள மீன்களின் திடீர் ஒட்டுமொத்த இறப்புக்கு வழிவகுக்கும். அதனால், கோயில் குளங்களை அவ்வப் போது சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க வேண்டும். குளங்களின் தூய்மை தொடர்பாக மண்டல இணை, உதவி ஆணையர்கள் மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். குளங்களின் படிக்கட்டுகளை பாசிகள் இன்றி தூய்மையாக பராமரிக்க வேண்டும். படிக்கட்டுகளை தாண்டி பக்தர்கள் யாரும் குளத்தில் இறங்காதவாறு தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
கோயில் குளத்தில் மீன்கள் இருப்பின், அதன் செயல் அலுவலர்கள், மீன்வளத்துறையை தொடர்புகொண்டு மீன்கள் பாதுகாப்பு, நீர் மாசுவை அகற்றுவது தொடர்பாக உரிய அறிவுரைகளை பெற்று செயல்பட வேண்டும். குளங்களில் கழிவுநீர் அல்லது பிற கழிவுகள் ஏதும் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். குளத்து நீரில் ஆக்சிஜன் அளவை அதிகரிக்க, குளத்தில் பல்வேறு இடங்களில் தேவையான எண்ணிக்கையில் நீரூற்றுகளை அமைக்க வேண்டும்.
ஆழமான பெரிய குளங்களில் நீரில் உள்ள ஆக்சிஜன் அளவை அதிகரிக்க, மேற்பரப்பு காற்றோட்ட அமைப்பை(Surface Aeration System) ஏற்படுத்த வேண்டும். திருவிழாக்களின்போது, பக்தர்கள் பூஜை சடங்கு பொருட்கள், மாலைகள், களிமண் விளக்குகளை குளத்தில் வீசாத வண்ணம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குளத்து நீரின் ஆக்சிஜன், பிஎச் அளவு, வெப்பநிலை, அமோனியா அளவுகளை தொடர்ந்து கண்காணித்து, மீன்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்ய வேண்டும். திருவிழாக்களின்போது குளங்களில் எண்ணெய் கலப்பதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் அதில் இடம்பெற்றுள்ளன.