Doctor Vikatan: என் வயது 27. மூன்று மாதங்களுக்கு முன்புதான் திருமணமானது. திருமணத்துக்கு முன்புவரை எனக்கு யூரினரி இன்ஃபெக்ஷன் (Urinary infection) வந்ததே இல்லை. இப்போது இந்த மூன்று மாதங்களில் மூன்று முறை வந்துவிட்டது. என் கணவருக்கு நீரிழிவு பாதிப்பும் இருக்கிறது. அதுதான் காரணம் என்கிறார்கள் சிலர். திருமணமான புதிதில் இப்படி இன்ஃபெக்ஷன் வருவது சகஜம்தான் என்கிறார்கள் வேறு சிலர். இதில் எது உண்மை… இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பெண்களுக்கான சிறுநீரகவியல் சிகிச்சை மருத்துவர் நிவேதிதா
இந்த விஷயத்தில் நீங்கள் கேள்விப்பட்ட இரண்டுமே உண்மைதான். திருமணத்துக்குப் பிறகு தாம்பத்திய உறவில் பதிதாக ஈடுபடுவதன் காரணமாக யூரினரி இன்ஃபெக்ஷன் (Urinary infection) வரலாம். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். அதாவது, ஆண்களுக்கு தொற்று பாதித்திருக்கும் நிலையில் விந்து வெளியேற்றும்போது வலி இருக்கலாம். அதேபோல, கணவருக்கு நீரிழிவு பாதித்திருந்தாலும், மனைவிக்கு அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் வரலாம்.
அடிக்கடி இப்படி தொற்று பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள், தாம்பத்திய உறவுக்கு முன்பும் உறவுக்குப் பின்பும் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், முதலில் அதிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும். வெளியிடங்களுக்குச் செல்லும்போது சிறுநீரை அடக்கக்கூடாது. போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சிறுநீரகத் தொற்று ஏற்பட்டவர்களுக்கு தாம்பத்திய உறவில் ஈடுபடுவது அசௌகர்யமாக இருக்கலாம்.
உடனடியாக குழந்தைக்கான திட்டமில்லை என்பவர்கள், தாம்பத்திய உறவுக்கு முன்பும், உறவு முடிந்த உடனேயும் சிறுநீரை வெளியேற்றிவிடுவது பாதுகாப்பானது. சிறுநீர்ப்பை நிரம்பிய நிலையில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வதாலும் யூரினரி இன்ஃபெக்ஷன் (Urinary infection) வர வாய்ப்பு உண்டு. அடிக்கடி தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளாத நிலையில், மனைவிக்கு சிறுநீர்ப்பாதை தொற்று வராமலிருக்க கணவர்களுக்கு மருத்துவர்கள் பொதுவான அறிவுரை ஒன்றைச் சொல்வதுண்டு. மூன்று நாள்களுக்கொரு முறை சுயமாக விந்தணுக்களை வெளியேற்றச் சொல்வோம். நீண்டநாள்கள் தேங்கியிருக்கும் நிலையில் விந்தணுக்களை வெளியேற்றும்போது அதன் காரணமாகவும் மனைவிக்கு சிறுநீர்ப்பாதை தொற்று வரக்கூடும் என்பதே காரணம்.
உங்கள் கணவருக்கு நீரிழிவு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நீரிழிவு இருப்பவர்கள் இதுபோன்ற இன்ஃபெக்ஷன்களுக்கு எளிதில் இலக்காவார்கள். ஆனால், அவர்களுக்கு இன்ஃபெக்ஷன் இருப்பதை உணரவே பல நாள்கள் ஆகும். அறிகுறிகள் ஏதுமில்லை என்பதால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று நினைத்துக்கொள்வார்கள். எனவே உங்கள் கணவருக்கு நீரிழிவு இருப்பதால் நீங்கள் அவருக்கும் சேர்த்தே யூரின் ரொட்டீன் மற்றும் யூரின் கல்ச்சர் டெஸ்ட்டுகளை எடுத்துப் பார்ப்பது அவசியம்.
ஒருவேளை அதில் இருவருக்குமோ, ஒருவருக்கு மட்டுமோ பிரச்னை இருப்பது உறுதியானால் அதற்கேற்ப சிகிச்சைகள் கொடுக்கப்பட வேண்டும். கட்டுப்பாடற்ற நீரிழிவும் இதற்கு ஒரு காரணம் என்பதால் உங்கள் கணவரின் ரத்தச் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதியுங்கள். எனவே அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷனை எதிர்கொள்கிற பெண்கள் அது தனக்கு மட்டுமேயான பிரச்னை என நினைக்காமல், கணவரின் பிரச்னையாகவும் இருக்கலாம் என்று யோசித்து மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.