முல்லை பெரியாறு அணை உருவான வரலாறைப் பேசும் நூல் “நீரதிகாரம்”.
வரலாற்றில் பஞ்சமும் அந்நிய ஆட்சியாளர்களுடைய அடக்குமுறையையும், மிகப்பெரிய பட்டினி கொடுமையாலும் உயிரிழப்பாலும் அந்நிய மண்ணுக்கு அகதிகளாக விரட்டிய கொடுமைகளை அனுபவித்த தமிழர்களின் வரலாற்றை மாற்றி எழுதிய ஒரு பிரிட்டிஷ் பொறியாளரின் கனவாக விரிந்தது முல்லைப் பெரியாறு அணை. இந்த செய்தியை விரித்து தனது படைப்பை “நீரதிகாரம் ” என்று தலைப்பில் ஆனந்த விகடன் புத்தகத்தில் தொடராக எழுதினார் கவிஞர் வெண்ணிலா.
ஒரு வறண்ட நிலப்பரப்பின் வாழ்வியலையும், அந்த நிலப்பரப்பை சோலைவனமாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் நிகழ்வுகளை பதிவு செய்த நீரதிகாரம் நூலைக் குறித்து `நீரதிகாரம் – சில பார்வைகள், சில பகிர்வுகள்!’ என்ற தலைப்பில் மதுரை மாவட்டம் மேலூரில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. துருவம் அமைப்பும், விஜயா பதிப்பகமும் இணைந்து நடத்திய இந்நிகழ்வு, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தலைமையில், பேச்சாளர் பாரதி பாஸ்கர், கவிஞர் தங்க மூர்த்தி, கவிஞர் வெண்ணிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய நீதிபதி சுரேஷ் குமார், ” நாங்கள் கடந்த காலங்களில் ஆனந்த விகடனின் வாசகர்கள் . அதில் வெளிவரும் அனைத்து தொடர்களையும் படித்து விடுவோம். ஆனால், தற்போது நேரமின்மையால் என்னால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. இந்த நீரதிகாரம் தொடர் ஆனந்த விகடனில் வெளிவந்த போது நான் படிக்க முடியவில்லை. விஜயா பதிப்பகத்தின் உரிமையாளர் வேலாயுதம் தான் இந்தப் புத்தகத்தைப் பற்றி எனக்குத் தெரிவித்து, அதை எனக்கு அனுப்பியும் வைத்தார். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினேன். எழுத்தாளர் வெண்ணிலா இப்படைப்பை வரலாற்றோடு புனைவு கலந்து திறம்பட இயற்றியிருக்கிறார். அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நூலுக்கு இணையான வரலாற்று படைப்பாக இந்த நீரதிகாரம் திகழ்கிறது”என்றார்.
பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசுகையில், “இந்த புத்தகத்தை நுட்பத்தைப் பற்றி பலர் பேசியிருக்கிறார்கள். நாம் மேடையில் பேசுவது என்பது மிகவும் எளிதான ஒன்று. ஆனால் எழுதுவது என்பது அவ்வளவு எளிதல்ல. எழுதுவதில் இருக்கக்கூடிய அனைத்தையுமே படிப்பவர்கள் உற்று நோக்கி கவனித்து வருவார்கள். எழுத்தாளர்கள் ஒரு சிறு தவறு செய்தால் கூட அவர்களை சுட்டிக்காட்ட ஆரம்பித்து விடுவார்கள். எனவே, பிறர் குறை கூறாதவாறு எழுதுவது என்பது மிகவும் கடினமானது. வெண்ணிலா மிகச் சிறந்த எழுத்தாளர் தவறு நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக பல முறை ஆராய்ச்சி செய்து தனது படைப்பை படைத்திருக்கிறார்.
ஒவ்வொரு எழுத்தாளரும் அப்படித்தான் தங்கள் படைப்புகளை படைக்கிறார்கள். ஒரு படைப்பு தான் படைப்பாளியை தேர்வு செய்கிறது. அதுபோல் தான் நீரதிகாரமும் வெண்ணிலாவை தேர்வு செய்திருக்கிறது. வெண்ணிலா இந்த புனைவு வரலாற்றை எழுதும் போது அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து உண்மையான தகவல்களை எழுதி உண்மையை மக்களுக்கு சேர்த்திருக்கிறார். ஆங்கிலேயர்களுக்கு சுரண்டல் மட்டுமே நோக்கமாக இருந்தது. ஆனால் அவர்களுள் ஒரு சிலர் மட்டுமே அறத்தை பின்பற்றுபவர்களாக இருந்தனர்.
அவர்கள் எடுத்த முயற்சிகளை பற்றி தான் வெண்ணிலா எழுதியிருக்கிறார். பென்னிகுவிக்கை போன்று தான் வெண்ணிலா தன் படைப்பை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட அணைக்காக தான் நாம் சுதந்திரம் கிடைத்த இத்தனை ஆண்டுகளுக்குப் பின்பும் இன்னமும் போராடி கொண்டே இருக்கிறோம். ” என்றார். எழுத்தாளர் வெண்ணிலா பேசுகையில், ” இறந்த காலத்தை நிகழ்காலமாக மாற்றுவதுதான் எழுத்து. நான் இப்போது கூட முல்லைப் பெரியாறு அணை கட்டிய காலக்கட்டத்தில் இருப்பது போல தான் உணர்கிறேன்.
மேற்கில் அரபிக் கடலில் கலந்த நதியை கிழக்கு நோக்கி கொண்டு வரும் எண்ணமே தமிழர்களின் மிகப்பெரிய சிறப்பு. 1800 முதல் திட்டம் தொடங்கி பல தடங்கல்களுக்குப் பிறகு 1895 ல் முடிந்த சிறப்பு வாய்ந்த திட்டம். பென்னிகுவிக் என்ற பெயருக்குப் பின்னால் முல்லை பெரியாறு அணைக்காக உழைத்த லட்சக்கணக்கான மக்களின் தியாகமும் இணைந்துள்ளது. நீர்பாசனத்தின் மூலம் இந்தியாவின் கட்டமைப்பை உயர்த்த பிரிட்டிஷ் அரசாங்கம் முயற்சித்தது.
பலர் தங்கள் உயிரையும் கொடுத்து உருவானது தான் முல்லை பெரியாறு அணை. ஒன்பது வருடம் காட்டில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களோடு தனி மனிதனாக இயற்கையோடு போராடி வெற்றி கண்டவர் பென்னி குவிக். கேரள அரசு என்ன சொன்னாலும், முல்லை பெரியாறு அணையின் உரிமை தமிழர்களுக்கே உரியது. நீரதிகாரம் வரலாற்றை மட்டும் கூறாமல் அதை மீட்பதற்கான வழிமுறையையும் கூறுகிறது. “என்றார்.