T20 World cup : ஆஸி-ஐ பழிதீர்க்க இந்தியாவுக்கு சூப்பர் வாய்ப்பு! ரோகித் இதை மட்டும் செஞ்சா போதும்

டி20 உலக கோப்பை 2024 தொடரில் குரூப்8 சுற்றுப் போட்டிகள் இன்றோடு முடிவடைகின்றன. ஏற்கனவே இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்ட நிலையில், எஞ்சிய இரண்டு அணிகள் எவை என்பது இன்னும் முடிவாகவில்லை. இரண்டு இடங்களுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் இப்போது போட்டியில் இருக்கின்றன. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகம். இதில் இந்திய அணிக்கு கூடுதல் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், தோற்றால் கூட 40 ரன்களுக்குள்ளாக தோற்றால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிடலாம். ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரை கட்டாயம் வெற்றி பெற வேண்டும். 

அதேபோல், ஆப்கானிஸ்தான் – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றாலே அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடலாம். இதனால், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இரண்டு போட்டிகள் இன்று டி20 உலக கோப்பை 2024 தொடரின் குரூப் 8 சுற்றில் இன்று நடக்க இருக்கின்றன. இந்திய அணியைப் பொறுத்தவரை இப்போட்டி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறுவது மட்டுமல்லாமல், அந்த அணி வைத்திருக்கும் பழைய கணக்கை தீர்க்க வேண்டிய பாக்கியும் இருக்கிறது.

2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் தான் நடைபெற்றது. அந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நிலையில், அதில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. அந்த தோல்வி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணி வீரர்களை வெகுவாக பாதித்தது. அகமதாபாத் மைதானத்தில் சுமார் ஒரு லட்சம் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முன்னிலையில், ஆஸ்திரேலியா அணி இந்தியாவை வீழ்த்தியது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க இந்திய அணிக்கு ஒரு சூப்பரான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றி என்பது இந்திய அணியை அரையிறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்வது மட்டுமல்லாமல், அந்த பழைய கணக்கை பழி தீர்க்கும் போட்டியாகவும் இது இருக்கப்போகிறது.

அதனால், இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டியை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் இப்போட்டி குறித்து பேசும்போது, ஆஸ்திரேலியா அணி வலுவானது என்பதை நிரூப்பிக்க இதைவிட சரியான சந்தர்ப்பம் கிடைக்காது என்பதால், இந்திய அணி உடனான போட்டியை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியிருக்கிறார். ரோகித் சர்மா படையும் இதை அதே ஆவலோடு தான் எதிர்பார்த்திருக்கிறது என்பதும் எதார்த்தமான உண்மை.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.