‘தி கோட்’ படத்தின் ‘சின்ன சின்ன கண்கள்’ வெளியாகி உலக அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்திருக்கிறது.
இதற்கு மறைந்த பிறகும் பாடகி பவதாரிணியின் குரல் மீண்டும் ஒலித்திருப்பதும் ஒரு காரணம். ’மறுபிறவி எடுத்துவிட்டாரா பவதாரிணி?’ என ஆச்சர்யப்படும் அளவுக்கு ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் அவரின் குரலில், பாடலை ஒலிக்கச் செய்து ஆச்சர்யத்தில் அசரவைத்திருக்கிறார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
பவதாரிணி மற்றும் விஜய் குரலில் உயிரூட்டப்பட்ட அப்பாடலை எழுதி உணர்வூட்டியவர் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து. அவரது வசனத்தில் விரைவில் எதிர்பார்ப்புகளை எகிறவைத்துள்ள ’இந்தியன் 2’ திரைப்படமும் வெளியாகவுள்ள நிலையில், “பவதாரிணியின் குரலில் வரப்போவது தெரிந்து இந்தப் பாடலை எழுதினீர்களா? இந்தளவுக்கு வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்த்தீர்களா? முதல் முதலில் விஜய்க்காகப் பாடலை எழுதிய அனுபவம் எப்படி இருந்தது? விஜய் இந்தப் பாடலை பாடிவிட்டு என்ன சொன்னார்?” என பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்…
“இந்தப் பாடல் நிச்சயமா வரவேற்பை பெரும்னு தெரியும். ஆனால், நினைத்து பார்க்கமுடியாத அளவுக்குப் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்று வருவது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இதற்கு முதலில் விஜய் சாருக்கும் வெங்கட் பிரபுவுக்கும் நன்றியை சொல்லிக்கிறேன். ரெண்டு பேருக்குமே நான் எழுதிய முதல் பாடல் இது.
வெங்கட் பிரபுவுக்கும் எனக்கும் நல்ல நட்பு உண்டு. அவர் படங்களும் தேர்ந்தெடுக்கிற கதைக்களங்களும் ரொம்ப பிடிக்கும். ’கோட்’ படத்துலதான் அவரோட ஒர்க் பண்ற வாய்ப்பு அமைஞ்சது. அதுவும் பாட்டுக்கான சூழ்நிலையைச் சொல்லி வெங்கட் பிரபு கேட்டப்போ, யார் பாடுறாங்கன்னே தெரியாது. அதுக்கப்புறம்தான் பவதாரிணியோட குரலைப் பயன்படுத்துறாங்கன்னு தெரிஞ்சு பெரிய சர்ப்ரைஸ் ஆச்சு.
பவதாரிணி குரல் ரொம்ப தனித்துவமானது. அவங்க பாடின பாடல்களில் ‘மயில்போல பொண்ணு ஒண்ணு’ பாடல் ரொம்ப பிடிக்கும். அவங்களோட இழப்பு ரசிகர்களுக்கு மட்டுமில்ல… திரைத்துறைக்கும் பேரிழப்பு. ஆனா, இப்போ ஏ.ஐ தொழில்நுட்பம் மூலமா, அதுவும் நான் எழுதிய பாடல் மூலமா திரும்பவும் உயிர்பெற்றிருப்பது ரொம்ப சந்தோஷம்.
ஆரம்பத்துல அவங்க குரல் பயன்படுத்தப் போறது தெரியாமலேயே ‘சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ… கருவறை மீண்டும் மணக்கிறதோ’ன்னு எதார்த்தமா எழுதினேன். ஆனா, பவதாரிணிக்கே அந்த வரிகள் பொருந்துற மாதிரி போனதுதான் ஆச்சர்யம்.
இது ஒரு கதைப்பாடல். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது என்னன்னா, படம் ரிலீஸ் ஆனபிறகுதான் இந்தப் பாடல் புரிந்துகொள்ளப்பட்டு நல்ல வரவேற்பு கிடைக்கும்னு நினைச்சேன். ஆனா, படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே உலக அளவுல இந்தப் பாடலுக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைச்சிக்கிட்டிருக்கு.
வீடியோ பார்த்துட்டு, இதை எல்லோரும் குடும்பப் பாடலா சொல்லி சந்தோஷப்படுறாங்க. அதுமட்டுமே கிடையாது. இன்றைய பரபரப்பான சூழலில் வறுமை, வேலைவாய்ப்பின்மை, போர் என உலகம் முழுக்க மன அழுத்தத்தோடு ஒரு நம்பிக்கையற்ற சூழல்தான் நிலவிக்கிட்டிருக்கு. ஆனா, இந்தப் பாட்டு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அன்பையும் தரக்கூடிய பாடல்.
நாம பாடல் எழுதிக் கொடுக்கும்போது சில நேரம் வரிகளை மாற்றச் சொல்லுவாங்க. நிறைய வெர்ஷன் போகும். இது எல்லா பாடலாசிரியர்களுக்கும் நிகழக்கூடிய நிகழ்வுதான். ஆனா, நான் ஒரே வெர்ஷன்தான் அனுப்பினேன், அதுவே ஓகே ஆகிடுச்சு.
விஜய் சார் பாட்டுப் பாடி முடிச்சதும், ’எல்லாம் ஓகேவா? இன்னும் வேற ஏதாவது பண்ணணுமா’ன்னு யுவன் கிட்ட கேட்டாரு. அஞ்சு நிமிஷம் யோசிச்ச யுவன், சூப்பர் சார்ன்னு சொல்லிட்டார். உடனே, என்னைப் பார்த்து சந்தோஷமா சிரிச்சார். அதுலயே, அவருக்கு எந்தளவுக்குப் பிடிச்சிருக்குன்னு தெரிஞ்சது. ’நீ ஒரு கோடி தாயின் பிள்ளை’ அப்படின்னு வரி வரும்.
தமிழ்நாட்டுத் தாய்மார்கள் விஜய் சாரை ஒரு மகனா ஏத்துக்கிறாங்கன்னும் எடுத்துக்கலாம். பயாலஜிக்கலாவும் எடுத்துக்கலாம். நாம எல்லோரும் ஒரு தாயின் கருவிலிருந்து வரல. நம்ப அம்மா அவங்க அம்மாவோட கருவிலிருந்து வந்தாங்க. இப்படி, இந்த உலகத்தின் நீண்ட நெடிய தொடர்ச்சி நீ என்றும் பெருமைப்படுத்தும் வரி அது.
அதேமாதிரி, சரணத்துல, ’மழை பொழிகிற இரண்டாம் நாளில் விழும் துளியில் மாசில்லை’ வரிகளை அறிவியல்பூர்வமாவும் எழுதியிருக்கேன். மழை சீசனில் முதல் மழை வரும்போது தூசியெல்லாம் கலந்தபடிதான் வரும். ஆனால், இரண்டாம் நாள் வரும் மழை சுத்தமானது. அதைத்தான் அந்த வரியில் அறிவியல்பூர்வமாக எழுதினேன். அந்த வரியில் ஒரு மறுமலர்ச்சி உள்ளது. படம் பார்த்தால் தெரிந்துகொள்வீர்கள்.
சமூக வலைதளங்களில் எல்லோருடைய கமென்ட்ஸ், ரீல்ஸ்களைக் கவனிச்சுக்கிட்டுத்தான் வர்றேன். தங்கள் வாழ்க்கையாக, தங்கள் உணர்வாகப் பார்க்கிறதா பலர் போஸ்ட் பண்ணியிருக்காங்க. பாட்டைக் கேட்டு முடிக்கும்போது அன்பும் மன நிம்மதியும் ஏற்பட்டிருக்குன்னு சொல்றாங்க. அவர்களைப் போலவே நானும் திரையில் பார்க்கக் காத்துக்கிட்டிருக்கேன்.
இப்பாடல் ஹிட் ஆக முதல் காரணம் பவதாரிணியின் குரல்தான். விஜய் சார் பாடி முடிச்சதும் யுவன் ப்ளே பண்ணி காண்பிச்சார். நான் என்ன உணர்ந்தேனோ, பவதாரிணியின் குரல் என் மனதை என்ன செய்ததோ, அந்த உணர்வுதான் உலகம் முழுக்க இருக்கிற ரசிகர்களிடையேயும் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது. மிக முக்கியமா, பவதாரிணி இல்லையேங்கிற ஏக்கத்தை இன்னும் அதிகப்படுத்தியிருக்குன்னுதான் சொல்லணும். ஏ.ஐ நுண்ணறிவு மூலமா நமக்குக் கிடைச்சிருக்கிற மிகப்பெரிய நன்மை இது.
இந்த பாடல் ஹிட் ஆக விஜய் சார் இரண்டாவது காரணம். அவருடைய குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும். விஜய் சார் ரெக்கார்டிங் ஸ்டூடியோ வந்தப்போ, யுவனிடம் முதல் முறையா வாய்ப்பு கேட்டு வர்ற ஒரு சாதாரண நபர் எப்படி வருவாரோ அந்தமாதிரி பவ்யமா, பணிவா நடந்துக்கிட்டார். யுவன் அப்படிப் பாடுங்க இப்படிப் பாடுங்கன்னு சொல்லும்போது அதை அப்படியே கேட்டுக்கிட்டு பாடினார். ரொம்ப புரொஃபஷனலா பாடினார். என்னைப் பார்த்துட்டு ‘செம்மையா எழுதியிருக்கீங்க. பாடல் வரிகள் சூப்பரா இருக்கு’ன்னு கை குலுக்கிப் பாராட்டினார்.
அவர், எந்தளவுக்குப் பாடல் வரிகளை ரசிச்சிருக்கார்ங்குறதை அவரோட முகத்தோட பரவசத்துல உணர முடிஞ்சது. ரொம்ப மனசிலிருந்து பாடியிருக்கார் விஜய் சார். மூணாவதா, யுவனுக்குத்தான் எல்லா புகழும். ஏன்னா, இந்தப் பாடலுக்கு அடித்தளமிட்டதே அவர்தான். ரொம்ப மெனக்கெட்டு ஒவ்வொரு ஓசையா செதுக்கி செதுக்கி பண்ணினார். வெங்கட் பிரபுவுக்கும் நன்றியை தெரிவிச்சிக்கிறேன்” என்பவரிடம் ”பாடல் குறித்து அப்பா வைரமுத்து என்ன சொன்னார்?” என்று கேட்டபோது,
“அப்பா ஐரோப்பிய பயணத்துல இருக்காங்க. பாடலைக் கேட்டுட்டு ரொம்ப நல்லாயிருக்கு. ரொம்ப நாள் கழிச்சு ஓர் இனிமையான பாட்டு. மகிழ்ச்சியாக இருக்கு” அப்படின்னு பாராட்டினார். எல்லோரும் அப்பாக்கள் கருத்து மோதல்ல ஈடுபடுறாங்க. மகன்கள் ஒண்ணா பணிபுரியுறாங்கன்னு கமெண்ட்ஸ் போடுறாங்க.
அப்பாக்கள்குள்ள கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனா, அவங்களும் ஒரு காலத்துல நண்பர்களா இருந்தவங்கத்தானே? நண்பர்கள் என்றாலே கருத்து மோதல்கள், வேறுபாடுகள் இருக்கத்தானே செய்யும்? விமர்சிப்பவர்கள் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல்லயே ‘உறவெல்லாம் ஒன்றாக’ன்னு வரும் வரியை பதிலா எடுத்துக்கலாம்” என்கிறார் நெகிழ்ச்சியாக.