புதுடெல்லி: கள்ளக்குறிச்சி துயர சம்பவத்தை அடுத்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமியை பதவி நீக்கம் செய்ய திமுகவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிழுதியுள்ள கடிதத்தில் பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா கடிதம் எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்தவர்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். 159 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் துயர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டின் ஆன்மாவையும் அசைத்துள்ளது.
கணவனை, தந்தையை, மகனை இழந்தவர்களின் அழுகுரல்கள் தொடர்பான வீடியோக்கள் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இந்த மிகப் பெரிய மனித துயரத்துக்கு வார்த்தைகள் மட்டும் ஆறுதலைத் தராது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரிவித்த பாஜக, வறுமையின் பிடியில் உள்ள அந்த குடும்பங்களுக்கு உதவிகளையும் அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய துயரம் முழுக்க முழுக்க மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. ஒருவேளை ஆளும் திமுக-இண்டியா கூட்டணி ஆட்சிக்கும், சட்டவிரோத மதுபான மாஃபியாவுக்கும் இடையே உள்ள ஆழமான தொடர்பு இல்லாமல் இருந்திருந்தால், இன்று 56 உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
கடந்த ஆண்டு மே மாதம் தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச் சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்தனர். அப்போதே, மாநிலத்தில் உள்ள சட்டவிரோத மதுபான மாஃபியா குறித்து திமுக அரசை பாஜக எச்சரித்தது.
எனினும், அந்த எச்சரிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. தற்போதைய துயர சம்பவத்திலும், இந்த சட்டவிரோத கள்ளச் சாராய வணிகம் எவ்வாறு தண்டனையின்றி, திறந்த வெளியிலும், பகல் நேரத்திலும், வெளிப்படையாக அரசு மற்றும் காவல்துறையின் அனுசரணையுடன் நடக்கிறது என்பதை ஊடகங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகள் தெளிவாக்கியுள்ளன.
மதுபான மாஃபியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அதனை மூடிமறைப்பதில் மாநில அரசு மும்முரமாக இருந்தது. உயிரிழப்புகள் அதிகரிக்க இது வழிவகுத்தது. இவ்வளவு பெரிய பேரழிவு சம்பவம் நடந்தபோதும், உங்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி மவுனம் சாதித்து வருவது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. இந்த நேரத்தில், பாஜகவும், நாடும் திமுக-இண்டியா கூட்டணிக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோருகிறது. தமிழக அரசு சிபிஐ விசாரணையை ஏற்பதையும், அமைச்சர் முத்துசாமியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.