‘அட, வலது காலை சரியா வைக்கல…’
‘ம்ஹும்…. முதல்ல நிக்கவே தெரியல’
‘இதெல்லாம் எழுந்து நின்னா என்ன… நிக்காட்டி என்ன?’
‘இப்ப நீயெல்லாம் எழுந்து நின்னு என்ன ஆகப்போகுது?’
தட்டுத்தடுமாறி எழுந்து நிற்கத் துடிக்கும் ஒரு குழந்தையைப் பார்த்து இப்படியெல்லாம் ஒருவர் பேசினால்…
”அட விட்டுத்தள்ளுங்க. அவனுக்கு தெரிஞ்ச லட்சணம் அவ்வளவுதான்.”
”பாவம், அந்தக் குழந்தை… அதைப் போய் இப்படி பேசறான். கோளாறான ஆளா இருப்பான் போலிருக்கு.”
– அந்த நபரை இப்படியெல்லாம்தான் விமர்சிக்கத் தோன்றும் பலருக்கும்!
அப்படித்தான் தோன்றுகிறது… ‘மத்திய அமைச்சர் சாவித்திரி தாக்கூருக்கு… சரியாக எழுதத் தெரியவில்லை…’
‘ம்… வெறுமனே 12- வது மட்டுமே படிச்ச இவங்களுக்கெல்லாம் மோடி எதுக்காக அமைச்சர் பதவி கொடுத்தாரு?’
என்றெல்லாம் எழுந்துகிடக்கும் விமர்சனங்களைப் பார்க்கும்போது.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் இனம் தட்டுத்தடுமாறி தற்போதுதான் ஒவ்வோர் இடமாக கால் ஊன்றி எழுந்து கொண்டிருக்கிறது. ஆனால், கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடி வைக்கும் வகையிலேயே இந்த ஆணாதிக்கவாதிகள் தொடர்ந்து இடைஞ்சல்கள் கொடுப்பதோடு… மறுபடி மறுபடி வீட்டுக்குள்ளேயே முடக்கிப் போடவும் துடிக்கிறார்கள்.
இப்படித்தான் இடஒதுக்கீட்டில் வருபவர்களையும் ‘கோட்டா’ என கிண்டலடிக்கிறார்கள்… ‘கோட்டா ஃபேக்டரி’யில் படிக்கவைக்கும் அளவுக்கு வசதிகளை எப்படி எப்படியோ பெருக்கிக் கொண்ட ‘பெருமக்கள்’.
பிரதமர் மோடியின் 3.0 அமைச்சரவையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார், சாவித்திரி. கடந்த வாரம், மத்திய பிரதேச மாநிலம், தார் மாவட்ட பள்ளிக்கூடமொன்றில் ‘ஸ்கூல் சலோ அபியான்’ திட்ட விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பள்ளி நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க, பெண் குழந்தைகள் தொடர்பான ‘பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ’ என்கிற மத்திய அரசின் பிரசார வாசகத்தை போர்டில் எழுதினார். அதில் எழுத்துப் பிழைகள் இருந்ததாகக் காணொலிகள் வைரலாக ஆரம்பித்துவிட்டன. அமைச்சர் சாவித்திரியை நெட்டிசன்களில் பலரும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர்.
அவர், உருது பாடத்திட்டத்தின் கீழ், ப்ளஸ்டூ வரை மட்டுமே படித்துள்ளார். இதையும் இணையத்தில் தேடிக் கண்டுபிடித்து, ’12-வது படித்தவருக்கு எதற்கு மத்திய அமைச்சர் பதவியைக் கொடுத்தார் மோடி?’ என்கிற கேள்வியுடன் மேலும் வன்மத்தைக் கக்க ஆரம்பித்துவிட்டனர்.
மாவட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சர்மா, ‘அமைச்சர் சாவித்திரி, இந்தி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவரல்ல. அவருடைய தாய்மொழி, நிமாரி. அந்த மொழியில்தான் போர்டிலும் எழுதினார்’ என விளக்கமளித்தார்.
இதற்கு எதிர்வினையாற்றிய மத்திய பிரதேசத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான உமாங் சிங்கார் (காங்கிரஸ்), ‘இரு வார்த்தைகள்கூட சரியாக எழுத தெரியாத மத்திய அமைச்சர் சாவித்திரியைப் பார்த்து, அந்தப் பள்ளிக்கூட மாணவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? ஓர் அமைச்சகத்தின் முதன்மை பிரதிநிதி, எப்படி இருக்க வேண்டும் என்ற எந்த அளவுகோலும் இல்லையா? இப்படிப்பட்ட ஒருவரை தங்களது பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கும் முன், வாக்காளர்கள் சிந்தித்திருக்க வேண்டும்’ என மிகக்கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதைப் பார்க்கும்போது, தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோயம்புத்தூர் மாநகராட்சியின் 9-வது வார்டு கவுன்சிலராக தி.மு.கவை சேர்ந்த சரஸ்வதி பதவியேற்ற காட்சிகள்தான் கண்களில் விரிகின்றன. ஆணையர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்போது, பதற்றத்தில் உறுதிமொழியை சரியாக உச்சரிக்க முடியாமல் திணறினார் சரஸ்வதி. அவரது அரசியல் முதல் முயற்சியையும், மேடை பதற்றத்தையும் புரிந்துகொள்ளாத இணையவாசிகள், சரஸ்வதியையும் அன்று கேலி செய்தனர்.
இதையடுத்து, யாரிடமும் பேசுவதையே தவிர்த்துவிட்டு முடங்கிப்போனார் சரஸ்வதி. அவருடைய உறவினர்கள் வழியாக அவள் விகடன் நிருபர் பேசியபோது, ‘மேடையில் முதல் முறை பேசியதால் பதற்றத்தில் அப்படி ஆகிவிட்டது. போகப்போக நான் பழகிவிடுவேன். இதைப் பற்றி இதற்கு மேல் பேச விருப்பமில்லை’ என்று தன் வருத்தங்களைப் பதிவு செய்தார்.
மதுரை மாநகராட்சியின் 26-வது வார்டு உறுப்பினராக, அ.தி.மு.கவை சேர்ந்த சொக்காயி பதவியேற்றுக் கொண்டபோது, ‘சட்ட முறைப்படி’ என்பதற்கு பதிலாக, ‘சட்டை முறைப்படி’ எனப் பதற்றத்தில் தடுமாறினார். இவரையும் இணையவாசிகள் விட்டுவைக்கவில்லை.
மக்கள் பிரதிநிதிகளாக தேர்தல்களில் களம் காண்பதற்கு குறைந்தபட்ச வயது உள்ளிட்ட சில தகுதிகள் மட்டுமே அரசியல் அமைப்பில் வகுக்கப்பட்டுள்ளன. கல்வித் தகுதி என்ற ஒன்று எங்குமே இல்லை. ஜனநாயக நாட்டில், அனைத்துத் தரப்பினரும் அரசியல் அதிகாரங்களுக்கு வரலாம் என்பதை உணர்த்தும் விதமாகவே, இத்தகைய நடைமுறை வழக்கத்தில் உள்ளது. அதாவது, படிக்காத பாமரனும் இந்திய ஜனநாயக நாட்டின் குடிமகன்தான். அவன் கைநாட்டாக இருந்தாலும், இந்த நாட்டையே ஆள்வதற்கு உரிமை உள்ளது என்பதைத்தான் அது வலியுறுத்துகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, படித்தவர்களைவிட மிகச்சிறப்பாக மக்கள் பணியாற்றியுள்ள எத்தனையோ பேரை இங்கே பட்டியிலிட முடியும். படித்துவிட்டு அமைச்சராக இருந்தால் மட்டும், பெருமையா? சொல்லப்போனால், படித்துவிட்டு பதவிகளைப் பிடித்திருக்கும் பலரால் நாட்டுக்கு மட்டுமல்ல… அவர்கள் படித்த படிப்புக்கே அவமானமாகத்தான் இருக்கிறது.
கேலி செய்பவர்களில் பலருக்கும் கிடைத்திருக்கும் உயர்கல்வி வாய்ப்பு, அவர்களுக்குக் கிடைக்கத் தவறியதற்கு, சமவாய்ப்பு இல்லாத இந்தச் சமூகம்தானே காரணமாக இருக்கமுடியும். பெண்கள் வாசற்படியைக்கூட தாண்டக்கூடாது என்று அடக்கி வைத்தவர்கள்தானே அதற்குக் காரணமாக இருக்கமுடியும்? அந்த ஆணாதிக்கச் சமூகத்தை நோக்கித்தான் இந்த கேலிகளும் கிண்டல்களும் பாயவேண்டும்.
பொதுச் சமூகம்தான் தவறாகச் சிந்திக்கிறது என்றால், எதிர்க்கட்சித் தலைவர் என்கிற உயரிய பதவியில் அமர்ந்திருக்கும் உமாங் சிங்கார்கூட இப்படியே சிந்திப்பது, வேதனையே. காங்கிரஸ் கட்சியின் புகழ்மிக்க தலைவர்களில் ஒருவரான காமராஜர், படிக்காத மேதை. தமிழகத்தின் முதல்வராக பணியாற்றியவர். ஏழை எளியோருக்கும் கல்வி சேர வேண்டும் என்று கல்விக் கண் திறந்தவர். ‘இந்திய பிரதமர் இந்திரா காந்திதான்’ என்று கைநீட்டிய கிங்மேக்கர். காங்கிரஸ் பாரம்பர்யத்திலிருந்து வந்திருக்கும் உமாங் சிங்கார், இதைக்கூட அறிந்திராதது துரதிர்ஷ்டமே!
பெண்கள் தேர்தல் களத்துக்கு வந்து கொண்டிருப்பது ஆரோக்கியமான, முக்கியமான மாற்றமாக பார்க்கப்பட வேண்டும். வீட்டில் அடைந்து கிடந்தவர்கள், மக்கள் பணியாற்ற வந்துள்ளதை வரவேற்க வேண்டும். இடஒதுக்கீட்டால் தகுதியற்றவர்கள் வந்துவிட்டார்கள் என, அவர்களின் கல்வித் தகுதி, பேச்சுத் திறமை போன்றவற்றை வைத்து எடை போட நினைப்பது, மகாகேவலம்.
ஒருவர், ஒரு குறிப்பிட்ட பதவியையோ, துறையையோ நிர்வகிக்கிறார் எனில், அத்துறை தொடர்பான வளர்ச்சித் திட்டங்கள் சரியில்லை என்றால், அவரை விமர்சிக்கலாம். அவரின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டுமா, தாராளமாக விமர்சிக்கலாம். அவர் வகிக்கும் பொறுப்பிற்கு தொடர்புடைய இடங்களில் எங்கெல்லாம் கொள்கை ரீதியாகவும், செயல்பாடு ரீதியாகவும் விமர்சிக்கும்படி நடந்துகொள்கிறாரோ, அங்கெல்லாம் விமர்சிக்கலாம். ஆனால், கல்வி, உருவகேலி உள்ளிட்ட தனிப்பட்ட விமர்சனங்கள்… வேண்டவே வேண்டாம். உண்மையில் அவர்களையெல்லாம் அந்த நிலையில் வைத்திருப்பதற்காக ஆணாதிக்கச் சமூகம்தான் தன்னையே கேலிக்கும் கிண்டலுக்கும் ஆட்படுத்திக் கொள்ள வேண்டும்.
முக்கிய அரசியல் பதவிகளில், ’முதல் பெண் இவர்தான்’ என பாடப்புத்தகங்களில் பெருமை கூறிக் கொள்ளும் நாம், ’அவருக்கு அடுத்து இவர்தான் இரண்டாம் இடத்தவர்’ என கை காட்ட இப்போதும்கூட ஒருவர் வரவில்லையே? இந்திராவுக்கு பிறகு, எந்தப் பெண்ணாலும் இந்திய பிரதமராக முடியவில்லையே? மக்களவை சபாநாயகராக பதவி வகித்த மீரா குமாருக்கு அடுத்து, யாரும் அப்பதவிக்கு வரவில்லையே? அரசியல் அதிகாரங்கள் ஆணாதிக்கவாதிகளின் கைகளில் சிக்கிக்கொண்டுள்ளது என்பதற்கு சாட்சிகள்தானே இவையெல்லாம்!
பெண்களின் இந்த நிலை மாறி, அரசியல் அறிவும், தெளிவும் மேம்பட மேலும் சில தசாப்தங்கள் தேவைப்படலாம். அவர்களுடைய பங்கினை அவர்கள் எடுத்துக்கொள்ளும்போதுதான், இது நல்வளர்ச்சி கண்ட சமுதாயமாக இருக்கும். மாறாக, அவர்களை வாயடைத்து, மீண்டும் வீட்டுக்குள்ளே முடங்கச் செய்தால், அது நல்ல சமூகமாக இருக்கவே இருக்காது. இருக்க முடியாது என்பதைத்தான் இன்றைய நிகழ்வுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
தாய்வழிச் சமூக மரபு கொண்ட நாம், அரசியல் களத்துக்கு வரும் பெண்களை `வாய்ப்பு கிடைத்துவிட்டது…’ என்று கேலிக்கு உள்ளாக்காமல், அவர்கள் பயணத்துக்குத் துணை நிற்க உறுதியேற்போம்!
முதலில், அவர்கள் எழுந்து நிற்கட்டும்!
– அவள்
#VoiceOfAval: இது பெண்களின் வாதத்தை பொதுச் சமூகத்தின் முன் வைக்கும் `அவளின் குரல்’. பெண்கள் பிரச்னைகளின் பேசாபொருளை மக்கள் முன் எடுத்துவைப்பதற்கான அவள் விகடனின் முன்னெடுப்பு!