சென்னை: “நெல்லை சாதி மறுப்பு திருமண விவகாரத்தில் சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தெரியவந்ததை அடுத்து இவ்வழக்கில் வன்கொடுமை தடுப்புப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.” என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
நெல்லையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் குண்டு வீசப்பட்டது தொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தனர். இந்த தீர்மானத்துக்கு விளக்கமளிக்கும் வகையில் நெல்லை சாதி மறுப்பு திருமணம் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஜூன் 13-ம் தேதி இருவேறு சமூகங்களைச் சார்ந்த மணமக்களுக்கு சாதி மறுப்பு திருமணம் முடித்து வைக்கப்பட்டு அது தொடர்பான புகைப்படம் முகநூலில் பதிவிட்டதாக தெரிகிறது.
இதனையடுத்து மணப்பெண்ணின் குடும்பத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்று இதுகுறித்து தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி இருக்கிறார்கள். இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டு 14 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 7 பேர் பெண்கள், பிணையில் விடுவிக்கப்பட்டார்கள். 7 ஆண்கள் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளனர்.
விசாரணையில் சம்பவத்தில் சாதிய வன்கொடுமை நிகழ்ந்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தெரியவந்ததை அடுத்து இவ்வழக்கில் வன்கொடுமை பிரிவுகளும் சேர்க்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சமூக நீதியை தனது உயிர் மூச்சாக கொண்டு தொடங்கப்பட்ட திமுக, பெண் கல்வி, சம உரிமை, சாதிய மறுப்பு திருமணம் ஆகியவற்றை தனது ஆரம்பகாலம் தொட்டே ஆதரித்து வரும் இயக்கம்.
திமுக அரசு பொறுப்பேற்றத்தில் இருந்து இதுபோன்ற பிற்போக்கு தனமான சமூக குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இதுபோன்ற இனங்களில் பதியப்படும் வழக்குகளில் குற்றவாளிகளுக்கு முறையான தண்டனை வாங்கி தரப்படுகிறது.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் குறிப்பிட்டபடி இதற்கென சிறப்பு சட்டத்தை கொண்டுவருவதை விட, தற்போது நடைமுறையில் உள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படையில் தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது என்று இந்த அரசு நம்புகிறது.
அந்த வகையில் சமீபத்தில் பல வழக்குகளில் விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வாங்கி தரப்படுகின்றன. உதாரணத்துக்கு கடலூர் இரட்டை கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டது. நாமக்கல் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, இதற்கென சிறப்பு சட்டத்தை கொண்டுவருவதை விட, தற்போது நடைமுறையில் உள்ள சட்டப்பிரிவுகள் அடிப்படையில் தீவிரமான, வேகமான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவது சரியானது என்று இந்த அரசு நம்புகிறது.
இந்த குற்றங்களை வெறும் குற்றவியல் நிகழ்வுகளாக பார்க்காமல் சமுக பொருளாதார பின்னணி காரணிகளை வைத்து ஆராய்ந்து பார்க்கும்போது குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவது ஒருபுறம் இருந்தாலும், சமுதாயத்தில் பொருளாதார வளர்ச்சியின் மூலமாக பெண் கல்வி உயரும்போது கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பில் வளர்ச்சி பெற்ற சமுதாயமாக உயரும்போது இதுபோன்ற குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும்.
அதுபோன்ற சமுதாயத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம். அதன் காரணமாகவே இந்த அரசு நடைமுறைப்படுத்த கூடிய புதிய திட்டங்களில் எல்லாம், பெண்களின் வாழ்க்கை, வாழ்வாதாரத்தை, கல்வியை மேம்படுத்தும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். உதாரணத்துக்கு புதுமைப்பெண், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் போன்ற திட்டங்கள்.
இவற்றை எல்லாம் தொடர்ந்து கொண்டு செல்லும்போது சமூகத்தில் மன மாற்றம் ஏற்படும். புதிய புதிய சட்டங்களுக்கான தேவையும் குறையும். அதனை நோக்கி தான் இந்த அரசு பயணிக்கிறது. இருந்தாலும், நமது இலக்கு சற்று தொலைவில் இருப்பதாலும், நடைமுறையில் இன்று சந்தித்து வரும் சமூக ரீதியிலான பிரச்சினைகளை, அதன் விளைவுகளை உடனடியாக எதிர்கொள்ளவும், அதற்கு தனி முக்கியத்துவம் அளிக்கும் விதமாக சாதி மறுப்பு திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்ற வழக்குகளை விரைந்து நடத்திட அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள்.
அதேபோல இதுபோன்ற குற்றங்களில் எல்லாம் குற்றவியல் நடைமுறை சட்டப்படி, காவல் ஆய்வாளர் விசாரணை அலுவலராக நியமிக்கப்படுவார். அதற்கு பதிலாக இந்த் குற்றங்களின் தீவிரத்தன்மையை கருத்தில் காவல் ஆய்வாளருக்கு பதிலாக காவல் துணை கண்காணிப்பாளரை விசாரணை அலுவலராக நியமிக்க சட்ட ஆலோசனையை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.