ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 அணியில் தனது பெயர் இடம் பெறாததை தொடர்ந்து ‘நானும் பணம் கொடுத்து PR ஏஜென்சியை வைத்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்று ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. டி20 உலக கோப்பை முடிந்த பிறகு அடுத்த மாதம் ஜிம்பாப்வேயில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த இருதரப்பு தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் 2024ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இந்த தொடரில் தனது பெயர் இல்லாததால் விரக்தி அடைந்துள்ளார்.
நானும் பணம் கொடுத்து PR ஏஜென்சியை வைத்துக்கொள்ள விரும்புகிறேன்’ என்று இன்ஸ்டாகிராமில் தனது விரக்தியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் “கடவுளே, என்னால் மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்ள எனக்கு அமைதி கொடுங்கள்; என்னால் முடிந்ததை மாற்ற தைரியம் மற்றும் வித்தியாசத்தை அறியும் ஞானம் வேண்டும்” என்றும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். வருண் சக்கரவர்த்தி இதுவரை 6 டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடி உள்ளார். ஐபிஎல் 2024ல் கொல்கத்தா அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த சீசனில் ஹர்ஷல் படேலுக்கு அடுத்தபடியாக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
32 வயதான வருண் சக்கரவர்த்தி ஜூலை 2021ல் இலங்கைக்கு எதிராக போட்டியில் இந்திய அணியில் அறிமுகமானார். மேலும் 2021 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அந்த தொடரில் பெரிதாக விக்கெட்களை எடுக்காத வருண் அதன்பிறகு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். 2021 டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்தியாவுக்காக வருண் சக்கரவர்த்தி விளையாடவில்லை.
சுப்மான் கில் தலைமையில் இந்திய அணி
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணியில் மூத்த வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. சுப்மான் கில் தலைமையில் இளம் இந்திய அணி ஜிம்பாப்வேயில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் விளையாடுகிறது. டி20 உலக கோப்பை முடிந்தவுடன் இந்த தொடர் நடைபெறுவதால் முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 6ம் தேதி ஹராரேயில் 5 டி20 போட்டிகளும் நடைபெற உள்ளது. 18 பேர் கொண்ட இந்த இளம் அணியில் ஐந்து வீரர்கள் அறிமுகமாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஐபிஎல் 2024ல் தனது திறமையின் மூலம் அறியப்பட்டவர்கள். அபிஷேக் சர்மா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, துஷார் தேஷ்பாண்டே மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஜிம்பாப்வே டி20 போட்டிகளுக்கான இந்திய அணி:
ஷுப்மான் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (WK), துருவ் ஜூரல் (WK), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே.