“அவரை சந்தித்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது” என்று நடிகர் அஜித் குறித்து கிரிக்கெட் வீரரான நடராஜன் பகிர்ந்திருக்கிறார்.
சமீபத்தில் நடராஜன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஜித் பங்கேற்றிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலில் கமென்டரி நிகழ்ச்சியில் நடராஜன் பங்கேற்றிருந்தார். அப்போது நடராஜனிடம், “நீங்கள் உங்கள் பிறந்தநாள் அன்று நடிகர் அஜித்தைச் சந்தித்த பிறகு வேற லெவலில் பெர்பார்மன்ஸ் செய்தீர்கள். அந்த நிகழ்வைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?” என்று வர்ணனையாளர் கேட்டிருக்கிறார்.
அதற்குப் பதிலளித்த நடராஜன், “அந்தப் பிறந்தநாள் எனக்கு மிகவும் ஸ்பெஷலான ஒன்று. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிசியோதெரபியான ஷாம் சுந்தர் மற்றும் தனசேகரன் ஆகியோர்தான் அஜித்துக்குத் தனிப்பட்ட முறையில் பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள். நான் எதிர்பார்க்கவில்லை.
அன்று ஹைதராபாத் அணியுடன் இரவு உணவு சாப்பிடத்தான் சென்றேன். திடீரென சர்ப்ரைஸ் ஆக இருவரும் அஜித்தை மீட் பண்ண வைத்தார்கள். கேக் வெட்டிக் கொண்டாடினோம். நான் அஜித்துடன் வீடியோ காலில்தான் பேசியிருக்கிறேன். அவரைப் பற்றி நிறைய நல்ல விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கேன். அதனால் நேரில் சந்திக்க வேண்டும் என நீண்ட நாள்களாக நினைத்திருந்தேன்.
அஜித் ரொம்ப எளிமையானவர். நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். நாங்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது எல்லாருடைய கார் கதவையும் திறந்து விட்டு வழியனுப்பி வைத்தார். அவரைச் சந்தித்தது வேறு மாதிரியான உணர்வாக இருந்தது. அந்த நாளை என்னால் மறக்க முடியாது!” என நடராஜன் கூறியிருக்கிறார்.