VVS Laxman: இந்திய கிரிக்கெட் அணி விரைவில் பல பெரிய மாற்றங்களை சந்திக்க உள்ளது. நடப்பு டி20 உலக கோப்பையுடன் தற்போதைய தலைமை பயிற்சியாளர் டிராவிட் ஓய்வு பெற உள்ளார். இவரை தொடர்ந்து புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. உலக கோப்பை இறுதி போட்டி முடிந்தவுடன் இந்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பவுலிங், பேட்டிங் பயிற்சியாளர்கள் மாற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் (NCA) தலைவராக இருக்கும் விவிஎஸ் லட்சுமண் இந்த பதவியில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது.
விவிஎஸ் லட்சுமண் கடந்த 2021 டிசம்பரில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பொறுப்பேற்று கொண்டார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் இந்த பதவியில் இருந்த அவர் இந்தியா U-19 மற்றும் இந்தியா A அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார். ராகுல் டிராவிட் இல்லாத சமயத்தில் இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். ட்ராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக லக்ஷ்மண் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் அந்த பதவியை மறுத்துவிட்டார் என்று கூறப்பட்டது. கடந்த 2021ல் லக்ஷ்மன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க விரும்பினார். ஆனால் அவருக்கு NCA தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
மீண்டும் ஐபிஎல்லில் லக்ஷ்மன்?
2019 முதல் 2021 வரை தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்த டிராவிட் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றார். ஐபிஎல்லில் 2013 முதல் 2021 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் மென்டராக இருந்த லக்ஷ்மண் பிறகு பிசிசிஐயில் சேர்ந்தார். தற்போது 2024ல் NCA தலைவராக லட்சுமணனின் பணிக்காலம் முடியவுள்ள நிலையில் மீண்டும் ஐபிஎல்லுக்கு செல்ல வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார்?
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை VVS லக்ஷ்மண் நிராகரித்த நிலையில், கொல்கத்தா அணிக்கு இந்த ஆண்டு கோப்பையை வென்று கொடுத்த கவுதம் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு லக்னோ அணிக்கு வழிகாட்டியாக கம்பீர் இருந்தார். கடந்த 2024ல் ஐபிஎல்லில் மீண்டும் கொல்கத்தா அணிக்கு திரும்பிய கம்பீர் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேகேஆர் கோப்பையை வெல்ல உதவினார். கம்பீர் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்து 2012 மற்றும் 2014ல் கோப்பையை வென்றார். தற்போது மூன்று ஐபிஎல் பட்டங்களை கொல்கத்தா அணி வைத்துள்ளது. சென்னை மற்றும் மும்பைக்கு அடுத்து அதிக கோப்பைகளை பெற்றுள்ளது.
உலக கோப்பை முடிந்த பிறகு நடைபெறும் போட்டிகளில் கம்பீர் தலைமையில் இந்திய அணி விளையாட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக இலங்கைக்கு எதிரான தொடரில் தனது பணியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் உள்ளன. இதற்கிடையில் ஜிம்பாப்வேக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு லக்ஷ்மண் தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடருக்கு சுப்மான் கில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.