இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரன் பிரபலமான கிரிக்கெட்டர்களில் ஒருவராகத் தடம் பதித்தவர். அதே வேளையில், இலங்கையில் குளிர்பானங்கள் மற்றும் திண்பண்ட நிறுவனங்களையும் பெரிய அளவில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் பிசினஸில் தீவிரமாக ஈடுபட்டு வரும் முரளிதரன், இந்தியாவிலும் தனது நிறுவனத்தை விரிவுபடுத்த முடிவு செய்திருக்கிறார். அதற்காக இடத்தை கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரை தேர்வு செய்திருக்கிறார்.
கர்நாடக மாநிலத் தொழில் துறை அமைச்சர் பாட்டீல் மற்றும் முரளிதரன் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
பழங்களை மூலப்பொருளாகக் கொண்டு குளிர்பானங்கள் மற்றும் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படவுள்ள இந்த நிறுவனத்திற்கு 1,400 கோடி ரூபாயை முரளிதரன் முதலீடு செய்ய இருக்கிறார்.
இந்தத் தொழிற்சாலைக்காக மைசூர் அருகில் உள்ள சாம்ராஜ் நகர் பகுதியில் சுமார் 45 ஏக்கர் பரப்பளவுள்ள நிலத்தை கர்நாடகா அரசு ஒதுக்கியுள்ளது.
முரளிதரனின் இந்திய முதலீடு குறித்து கர்நாடக மாநில தொழில்துறை அமைச்சர் பாட்டீல் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு நல்வாய்ப்புகள் ஏற்படவுள்ள முரளிதரனின் தொழிற்சாலைக்கு தேவையான சலுகைகள் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கப்படும் என்றும் கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது. அடுத்த ஆண்டு முதல் இந்த தொழிற்சாலை இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் குளிர்பானத் தொழிற்சாலையை முத்தையா முரளிதரன் தமிழகத்தில் ஏன் அமைக்கவில்லை, இதற்காக தமிழக அரசை அவர் தொடர்பு கொண்டாரா என்கிற கேள்விகளுக்கு பதில் என்ன?