2025ஆம் ஆண்டு முதல் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மிக நுணுக்கமான ஆய்வுகளின் பின்னரே, வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாகவும், சர்வதேச நாணய நிதியத்துடனான நீட்டிக்கப்பட்ட கடன் ஒப்பந்தத்தின் கீழ் நாடு பயணித்து வருவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
அந்த ஒப்பந்தத்தின் படி, பூர்த்தி செய்யப்பட வேண்டிய நிபந்தனைகள் மற்றும் முன்நிபந்தனைகள் உள்ளன. மொத்த அந்நிய செலாவணி கையிருப்பை 2025ல் 8 பில்லியன் ரூபாயாகவும், 2026ல் 10 பில்லியனாகவும், 2027ல் 14 பில்லியனாகவும் அதிகரிக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்.
அந்த வெளிநாட்டு கையிருப்பு பறிபோகும் வகையில் தளர்வு செய்ய முடியாது, எனவே சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கேட்டு முறையீடு செய்வதற்கு நிதியமைச்சின் கீழ் ஜனாதிபதி குழுவொன்றை நியமித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.