India vs England Match Rain Forecast: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடர் நடைபெற்று வருகிறது. சூப்பர் 8 சுற்று போட்டிகள் இன்றோடு நிறைவடைந்தன. இதை தொடர்ந்து, இந்திய நேரப்படி ஜூன் 27ஆம் தேதி காலை 6 மணிக்கு முதல் அரையிறுதி போட்டியும், ஜூன் 27ஆம் தேதி இரவு 8 மணிக்கு இரண்டாவது அரையிறுதி போட்டியும் நடைபெறும். ஜூன் 29ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறும்.
சூப்பர் 8 சுற்றில் முதல் குரூப்பில் இடம்பெற்றிருந்த இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. இரண்டாவது பிரிவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா உள்ளிட்ட அணிகளில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
பழிதீர்க்குமா இந்தியா?
அதன்படி, முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டிரினிடாடில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. தொடர்ந்து, கயானாவில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் பலரும் எதிர்பார்க்கும் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 2023ஆம் ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டி தோல்விக்கு இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியாவை பழிதீர்த்த நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பழிதீர்க்குமா என பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்திய அணி இந்த தொடரில் ஒருமுறை கூட தோல்வியடையவில்லை.இங்கிலாந்து அணியும் ஆஸ்திரேலியா உடன் மட்டுமே தோல்வியை தழுவியிருந்தது. சம பலம் வாய்ந்த அணிகள் மோத இருப்பதும் போட்டியின் மீதான கவனத்தை அதிகப்படுத்தி உள்ளது. எந்த அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற போகின்றன என கடும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மழைக்கு அதிக வாய்ப்பு
இந்நிலையில், போட்டி நடைபெறும் அன்று கயானாவில் 88% மழைக்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இடியுடன் கூடிய மழைக்கு 18% வாய்ப்பிருப்பதாகவும் வானிலை நிலவரங்கள் கூறுகின்றன. கயனாவில் ஜூன் 27ஆம் தேதி காலை 10.30 மணிக்கு போட்டி தொடங்கும். அப்போது இங்கு இரவு 8 மணியாகும்.
மேலும், கயனாவில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது. இருப்பினும் போட்டி மழையால் தடைப்பட்டால் 250 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்திற்கு போட்டி நடைபெறவிட்டால்தான் சிக்கல் வரும்.
மழை வந்தால் இறுதிப்போட்டிக்கு செல்லப்போவது யார்?
அதுவும் போட்டி மழையால் முழுமையாக ரத்து செய்யும்பட்சத்தில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும், இங்கிலாந்து அணி வெளியேறும். ஏனென்றால், அரையிறுதிக்கு முந்தைய சுற்றான சூப்பர் 8இல் இந்திய அணி அதன் பிரிவில் முதல் இடத்தை பிடித்தது. இரண்டாவது பிரிவில் இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்தை பிடித்ததால், இந்திய அணியே மழை காரணமாக போட்டி ரத்தானால் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பெறுவார்கள் எனலாம்.