வெளிநாட்டு கார் நிறுவனங்கள், தங்களின் அதிகாரபூர்வமான சோஷியல் மீடியா பக்கங்களில் – விஐபி-க்கள் யாராவது தங்கள் பிராண்ட் காரை வாங்கினால் அதை புரொமோஷன் செய்வது வழக்கம். அப்படி லேட்டஸ்ட்டாக போர்ஷே நிறுவனம், மலையாள நடிகர் பிரித்விராஜ், போர்ஷே டெலிவரி எடுக்கும் வீடியோவைப் பகிர்ந்து வருகிறது.
போர்ஷே பற்றித் தெரியும்தானே! ஜெர்மனியைச் சேர்ந்த இந்த நிறுவனம், முன்பு எப்போதையும்விடப் பிரபலம். காரணம் ஏன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும். புனேவில் குடித்துவிட்டு கார் ஓட்டி, சிறுவன் ஏற்படுத்திய ஒரு கொடூரமான விபத்தின் மூலம்தான் ஃபெமியிலியர் ஆகி இருக்கிறது. இப்போதெல்லாம் கூகுளில் போர்ஷேனு டைப் செய்தாலே, அந்த புனே விபத்துதான் வருகிறது. அது போர்ஷேவுக்கு நிச்சயம் இறங்குமுகம்தான்.
இந்த நிலையில் போர்ஷே, கேரள நடிகர் பிரித்விராஜ் மூலம் கொஞ்சம் மகிழ்ச்சியடைந்திருக்கிறது. ஆம், போர்ஷேவில் 911 GT3 எனும் ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியிருக்கிறார் மலையாள சூப்பர் ஸ்டார் பிரித்விராஜ். ‛ஆடுஜீவிதம்’ படத்தில் அப்படியே சோகமான, பரிதாபமான உருவத்துடன் தோன்றிய பிரித்விராஜ், போர்ஷே டெலிவரியில் செம ஸ்டைலாக சாக்லேட் பாய் மாதிரி காரை ஓட்டிப் பார்ப்பது ‛வாவ்’ என்றிருக்கிறது. ஏற்கெனவே பிரித்விராஜ் – பிஎம்டபிள்யூ M760, லம்போகினி உருஸ், வேனிட்டி வேன், மினிகூப்பர் JCW, மெர்சிடீஸ் பென்ஸ் G63 AMG என ஏகப்பட்ட கார் கலெக்ஷன் வைத்திருக்கிறார். இந்த நிலையில் அவரின் கராஜில் போர்ஷேவும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
இதன் எக்ஸ் ஷோரூம் விலையே 2.75 கோடி ரூபாய். ஆன்ரோடுக்கு வரும்போது சுமார் 3 கோடியைத் தாண்டிவிடும். செம ஸ்டைலான இந்த அல்ட்ரா மாடர்ன் ஸ்போர்ட்ஸ் காரைப் பற்றிப் பார்க்கலாம். அவர் வாங்கியிருப்பது 911 GT3-ன் டூரிங் பேக்கேஜ் என்றொரு மாடல். இது ஒரு கூபே ஸ்போர்ட்ஸ் கார். ரூஃப் இல்லையென்றால், இது பார்ப்பதற்கு ஃபார்முலா 1 கார்போலவே செம ஸ்டைலாக இருக்கும். காரே பிடிக்காதவர்களுக்கும் இதன் பின் பக்கத்தைப் பார்த்தால்… பிடிக்கும். கனெக்டிங் எல்இடி லைட் அட்டகாசமாக ஒளிரும் இரவு நேரத்தில். வழக்கமாக எக்ஸாஸ்ட் பைப்கள், காரின் வலதுபுறத்தில்தானே இருக்கும். இதில் இரட்டை சைலன்ஸர்கள் நட்டநடுவாக வீற்றிருக்கும்.
ஃபெராரி, லம்போகினி, போர்ஷே போன்ற ஸ்போர்ட்ஸ் கார்களின் முக்கியமான அம்சமே – காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கும் ஏரோடைனமிக் டிசைன்தான். அது இந்த போர்ஷே 911 GT3-க்கும் பக்காவாகப் பொருந்தும். பின் பக்கம் ஸ்பாய்லர் இல்லாமலே இது டிராக்ஃபோர்ஸைக் குறைக்கும்படி டிசைன் செய்யப்பட்டிருப்பது ஆசம்!
இது ஒரு 2 டோர் கார்தான். முழுக்க முழுக்க லைட் வெயிட் அலுமினியம் பாடியால் தயாரிக்கப்பட்ட இந்தக் காரின் எடை 1,493 கிலோதான். இதில் அதிகபட்சம் 320 கிலோதான் ஏற்றிப் போக முடியும். காரின் உள்ளே நுழைந்தால், லெதர் வாசம்தான் தூக்கலாக இருக்கும். சீட்கள், ஸ்டீயரிங் வீல், கியர் ஷிஃப்ட் லீவர், டோர் பேனல், ஸ்டோரேஜ் கம்பார்ட்மென்ட், ஆர்ம்ரெஸ்ட் என எல்லாமே லெதர்மயம்தான்.
இதிலுள்ள 4000 சிசி பெட்ரோல் இன்ஜினில் 6 சிலிண்டர்கள் உண்டு. இதன் பவர் 510bhp. இதன் அதிகபட்ச டார்க் 470Nm. சும்மா ‛வ்வ்ர்ர்ரூம்’ காட்டும். 0-100 கிமீ-க்கு வெறும் 3.9 விநாடிகள்தான் ஆகும். இதன் டாப் ஸ்பீடு 320 கிமீ.
அது சரி… கேரளாவில் 90 கிமீ-க்கு மேல் ஸ்பீடு போனா அபராதமாமே!?