ஏ.பி.முருகானந்தம், மாநிலப் பொதுச்செயலாளர், பா.ஜ.க.
“உளறிக்கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி. ‘இந்தத் தேர்தலில் பெரிய அளவில் வெற்றி பெற்றுவிடுவோம். மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடுவோம்’ என்று கற்பனையில் மிதந்துகொண்டிருந்தது காங்கிரஸ். ஆனால், மக்கள் காங்கிரஸை நிராகரித்திருக்கிறார்கள். இந்தத் தேர்தல் முடிவுகளால் மனமுடைந்து போயிருக்கிறது காங்கிரஸ். இந்தத் தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாமல், உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பது ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியினரும், அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்தவர்களும்தான். பத்தாண்டுக்கால பா.ஜ.க-வின் நல்லாட்சிக்கு, மக்கள் மீண்டும் கொடுத்த அங்கீகாரமே இந்தத் தேர்தல் வெற்றி. இந்த நிலையில், ‘பா.ஜ.க கூட்டணிக் கட்சியினரிடையே மோதல் போக்கு இருக்கிறது’ என்று இல்லாத ஒன்றைப் பரப்பிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். முன்பு இவர்கள் கட்டமைத்த பல கட்டுக்கதைகளைப்போல, ‘பா.ஜ.க கூட்டணியில் சலசலப்பு’ என்று கதைகட்டுகிறார்கள். எப்படியாவது, ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எத்தனிக்கிறது காங்கிரஸ். அவர்களின் எண்ணங்கள் அனைத்துமே பயனற்றுப்போகும். கண்டிப்பாக இந்த ஆட்சி, ஐந்து வருடங்களும் முழுமையாக நடந்து முடியும்!”
கோபண்ணா, துணைத் தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி.
“ராகுல் காந்தி சொன்னது முழுக்க முழுக்க உண்மை. மதவாத அரசியலை மட்டுமேவைத்து இரண்டு முறை ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. இந்தத் தேர்தலில், கடந்த பத்தாண்டுகள் அவர்கள் செய்த ஆட்சியின் சாதனையைச் சொல்லி வாக்கு கேட்கவில்லை. அப்படி ஏதாவது செய்திருந்தால்தானே கேட்பதற்கு… மாறாக, ‘புதிதாக எழுப்பிய ராமர் கோயில் பா.ஜ.க-வுக்குக் கைகொடுக்கும்’ என்று மனக்கோட்டை கட்டியிருந்தார்கள். ஆனால், அது பலிக்கவில்லை. ராமர் கோயில் கட்டிய உத்தரப்பிரதேசத்திலேயே பா.ஜ.க-வுக்கு ஒரு பெரிய இடி விழுந்தது. வகுப்புவாத அரசியலுக்கு மக்கள் இடம் கொடுக்கவில்லை. இதை பா.ஜ.க சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில், எந்தத் திட்டம், சட்டம் குறித்தும் ஆட்சியாளர்களுக்குப் புரிதல் இல்லை. அதனால்தான் பிரதமர் மோடி பத்திரிகையாளர்களையும் சந்திப்பதில்லை, நாடாளுமன்ற விவாதங்களிலும் பங்கேற்பதில்லை. இந்த மைனாரிட்டி அரசில் நடக்கும் விஷயங்கள் குறித்து வாய்கூடத் திறக்க முடியாத நிலையில்தான் இருக்கிறார் பிரதமர் மோடி. நீட் தேர்வில் இவ்வளவு பெரிய மோசடி நடந்திருப்பது தெரியவந்தும் ஒரு கருத்துகூட சொல்ல முடியாதவராக இருக்கிறார். உண்மையில் ஆட்சியை நடத்த முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு!”