மதுரை: தாமிபரணி ஆற்றை மாசுபடுத்துவதை தடுக்கக் கோரிய வழக்கில் நிபுணர் குழு அமைத்து ஆற்றை முழுமையாக ஆய்வு செய்ய ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த முருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: “பாபநாசம் அருள்மிகு பாபநாச சுவாமி கோயிலுக்கு தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு சென்று தரிசித்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இந்தக்கோயில், இறந்தவர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்கும் இடமாகவும் உள்ளது. தற்போது திதி, தர்பணத்துக்கு வருபவர்கள் தாங்கள் அணிந்து வரும் ஆடைகளை அப்படியே ஆற்றில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் தாமிரபரணி ஆறு முழுவதுமாக மாசடைந்து வருகிறது.
இந்த துணிகளில் சிக்கி ஆற்றில் குளிக்கச் செல்லும் சிறுவர்கள், பொதுமக்கள் உயிரிழக்கும் நிலை உள்ளது. எனவே பாபநாசம் கோயிலில் தர்ப்பணம், திதி செய்ய உள்கட்டமைப்பு வசதிகளை செய்யவும், தாமிரபரணி ஆறு கழிவுகளால் மாசு படுவதைத் தடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை சார்பில், பாபநாசம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்ய ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், மத நம்பிக்கை அடிப்படையிலான செயல்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. அவற்றை முறைப்படுத்தலாம். எனவே தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்பொறியாளர், நெல்லை மாவட்ட ஆட்சியர் நிபுணர் குழு அமைத்து, தாமிரபரணி ஆற்றை முழுமையாக ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 15-க்கு ஒத்திவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.