நாகர்கோவில்: போக்சோ வழக்கில் சிக்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ; விடுவித்து உத்தரவிட்ட கோர்ட்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ம் தேதி காணாமல் போனதாக, அவரது தந்தை கோட்டாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீஸார் விசாரணை நடத்தி வாலிபருடன் சுசீந்திரத்தில் பதுங்கியிருந்த சிறுமியை மீட்டனர். சிறுமி விவகாரம் என்பதால், வழக்கு நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அனைத்து மகளிர் போலீஸார் அந்த வாலிபரை கைது செய்ததுடன் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது தாயின் உறுதுணையுடன் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் உள்ளிட்ட சிலர் தன்னை சிறார் வதை செய்ததாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து நாஞ்சில் முருகேசன், பால், அசோகன், கார்த்திக் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர்மீது போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அ.தி.மு.க கட்சியில் இருந்து நாஞ்சில் முருகேசன் நீக்கப்பட்டிருந்தார்.

கோர்ட்

வழக்கு பதிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டம், கடைக்குளம் பகுதியில் ஒரு மருத்துவரின் தோட்டத்தில் பதுங்கியிருந்த நாஞ்சில் முருகேசன் கைதுசெய்யப்பட்டார். கோர்ட்டில் ஆஜர்படுத்தும் முன் மருத்துவப் பரிசோதனை செய்ததில் ரத்த அழுத்தம் மற்றும் சுகர் பிரச்னை இருந்ததால் நாஞ்சில் முருகேசன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், அதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது என அடுத்தடுத்து நிகழ்வுகள் நடைபெற்றன. உடல்நிலை சீரான பின் நாஞ்சில் முருகேசன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

போக்சோ வாக்கில் விடுவிக்கப்பட்ட அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன்

பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். நாஞ்சில் முருகேசன் மீதான போக்சோ வழக்கு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட  முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், இன்று வழங்கிய தீர்ப்பில் நாஞ்சில் முருகேசனை வழக்கில் இருந்து விடுதலைசெய்து உத்தரவிட்டுள்ளார். போக்சோ வழக்கில் சிக்கியதால் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட நஞ்சில் முருகேசன், பின்னர் அ.ம.மு.க-வுக்குச் சென்றுவிட்டு மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.