`நிழல் பிரதமர் பதவி, சிபிஐ டு தேர்தல் ஆணையம்' – எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் அதிகாரங்கள் என்னென்ன?

நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையை, நடந்துமுடிந்த 18-வது மக்களவைத் தேர்தல் மூலம் காங்கிரஸ் நிரப்பியிருக்கிறது. மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாவதற்கு மொத்தமுள்ள நாடாளுமன்ற இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவிகித இடங்களையாவது, அதாவது 55 இடங்களையாவது பெறவேண்டும். ஆனால், 2014, 2019 என பா.ஜ.க தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்ற இரண்டு தேர்தலிலும் 44, 52 இடங்கள் பெற்ற காங்கிரஸால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெறமுடியாமல் போனது.

சோனியா, கார்கே, பிரியங்கா, ராகுல்

வெறுமனே, மக்களவையில் காங்கிரஸ் குழுவின் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவும் கடந்த ஆட்சியில் செயல்பட்டனர். இத்தகைய, சூழலில் நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 240 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையை இழந்த பா.ஜ.க, தேசிய ஜனநாயக கூட்டணியாக 293 இடங்களை வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. அதேசமயம், இந்தியா கூட்டணியாகக் களமிறங்கிய காங்கிரஸ் தனியாக 99 இடங்களை வென்று, மக்களவையில் வெற்றிடமாக இருந்த அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி இடத்தை நிரப்பியது.

இருப்பினும், தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று வாரங்களாக எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதை அறிவிக்காமலிருந்த காங்கிரஸ், இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக நேற்று அறிவித்தது. இதன் மூலம், காங்கிரஸ் வரலாற்றில் மூன்றாவது எதிர்க்கட்சித் தலைவரானார் ராகுல் காந்தி. இதற்கு முன்னர், 1989-90ல் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் இவரின் தந்தை ராஜீவ் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அதன்பின்னர், 1999-2004ல் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் இவரின் தாய் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

சோனியா காந்தி ராகுல் காந்தி

இவர்களுக்குப் பிறகு காங்கிரஸில் ராகுல் காந்தி தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அலங்கரிக்கிறார். இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையில், “எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதன் மூலம், இந்திய அரசியலமைப்பைக் காக்கும் உங்கள் கடமையைச் செய்வீர்கள்” என சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.

கேபினட் அமைச்சர் பதவிக்கு சமமான அந்தஸ்துடைய எதிர்க்கட்சித் தலைவரை, நிழல் பிரதமர் என்று அழைக்கப்படும் சொல்லாடலும் உண்டு. ஏனெனில், ஆளும் அரசாங்கம் கவிழும் பட்சத்தில் அடுத்து ஆட்சிப்பொறுப்பேற்க உரிமை கோரும் இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இருப்பதால் இவ்வாறு கூறப்படுகிறது.

*அரசாங்க கொள்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் கேள்விக்குட்படுத்தலாம்.

*முக்கியமான பிரச்னைகளில் ஆளும் அரசு பதிலளிப்பதிலிருந்து விலகும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் அதன்மீது விவாதம் கோரலாம்.

*வெளிநாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்புக் கொள்கை போன்ற விஷயங்களில், பிரதமர் சில சமயங்களில் உறுதிமொழி எடுப்பதற்கு முன், எதிர்க்கட்சித் தலைவரைக் கலந்தாலோசிக்கலாம்.

புதிய நாடாளுமன்றம்

*எதிர்க்கட்சித் தலைவர் சொந்த நாட்டிலிருக்கும்போதும், அவைக்கு உள்ளேயும், வெளியேயும் அரசை கடுமையாக விமர்சிக்கலாம். ஆனால், வெளிநாட்டில் இருக்கும்போது, அதைத் தவிர்க்கவேண்டும்.

*சிறுபான்மையினரின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், சிறுபான்மையினரின் உரிமைகள் மீறப்படும்போது அதில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடலாம்.

*மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (CVC), மத்திய தகவல் ஆணையம் (CIC), மத்திய புலனாய்வு அமைப்பு (CBI), இந்திய தேர்தல் ஆணையம் (ECI), இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம், லோக்பால் ஆகிய சட்டப்பூர்வ அமைப்புகளின் தலைமை அதிகாரிகள்/ஆணையர்களை நியமிக்கும் பொறுப்புக் குழுக்களில் பிரதமர், ஒரு மத்திய அமைச்சருடன் எதிர்க்கட்சித் தலைவரும் இடம் பெறுவார்.

நாடாளுமன்றம்

*மக்களவையில் துணை சபாநாயகர் இருக்கைக்கு அருகிலுள்ள முன்வரிசையில் இருக்கை ஒதுக்கப்படும்.

*நாடாளுமன்ற வளாகத்தில் செயலகம் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய அறை ஒதுக்கப்படும்.

*மற்ற எம்.பி-க்களுக்கு வழங்கப்படுவது போல, மாத சம்பளம், கூட்டத்தொடரின்போது தினசரி கொடுப்பனவு, அலுவலக செலவு கொடுப்பனவு, தொகுதி கொடுப்பனவு உள்ளிட்டவை வழங்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.