ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு பரிசுத் தொகை அதிகரிப்பு

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஜூலை 26-ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். கொரோனாவால் ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த கடந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கம் வென்றது. இந்த ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதை குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகையை அதிகரிக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்துள்ளது. இதன்படி பாரீஸ் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ,1 கோடியும், வெள்ளிப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ,75 லட்சமும், வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றுபவர்களுக்கு ரூ,50 லட்சமும் வழங்கப்படுகிறது. கடந்த முறை முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ,75 லட்சம், ரூ,40 லட்சம், ரூ,25 லட்சம் வழங்கப்பட்டது.

ஆக்கி போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தால் ரூ,2 கோடியும், வெள்ளிப்பதக்கம் வென்றால் ரூ,1 கோடியும், வெண்கலப்பதக்கம் பெற்றால் ரூ,75 லட்சமும் வழங்கப்பட இருக்கிறது. அத்துடன் வீரர்களுக்கு தினசரி அலவன்சாக ரூ,4,200 அளிக்கப்பட இருக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.