உதகை: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டாம் நாளாக இன்றும் (ஜூன் 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்கிறது. மழையுடன் பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் சாலிகளில் சாய்ந்து உள்ளன. சாலைகளில் விழுந்த மரங்களை தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றுகின்றனர். கூடலூா் நகராட்சிக்கு உட்பட்ட இருவயல் பகுதியில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
அதிகபட்சமாக பந்தலூரில் 123 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால் கூடலூர் தாலுகாக்கு உட்பட்ட கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டாம் நாளாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா உத்தரவிட்டார்.
மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை நிலவரம்: கூடலூர் 27, தேவாலா 56, சேரங்கோடு 125, அவிலாஞ்சி 122, பாடந்துறை 88, ஓவேலி 21, அப்பர் பவானி 91, செருமுள்ளி 82, நடுவட்டம் 16, கிளன்மார்கன் 10, குந்தா 23, எமரால்டு 56, உதகை 23.8, கோத்தகிரி 10, கோடநாடு 14, கீழ் கோத்தகிரி 8, கெத்தை 11, குன்னூர் 9, கேத்தி 12, பர்லியார் 6 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
மின் உற்பத்தி அணைகளின் ஈர்ப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றனர்.