அரையிறுதி வரை ஊக்கமளிக்கும் வகையில் முன்னேறிய ஆஃப்கானிஸ்தான் அணி அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மிகமோசமாகத் தோற்று வெளியேறியிருக்கிறது.
ஆஃப்கானிஸ்தானின் தோல்விக்கு இந்தத் தொடர் முழுவதும் அவர்களுக்கு தொடர்ந்திருந்த ஒரு பிரச்னைதான் முக்கிய காரணமாக மாறியிருக்கிறது. அரையிறுதியிலும் அந்த ஒரு பிரச்சனைதான் அவர்களின் கனவை காவு வாங்கியிருக்கிறது.
‘டாப் ஆர்டர் மீது அதிக சுமை இருக்கிறது. எங்களின் மிடில் ஆர்டரை இன்னும் வலுப்படுத்த வேண்டும். மிடில் ஆர்டரில் அக்ரஸிவ்வாகவும் ஆட வேண்டும் மற்றும் நின்று இன்னிங்ஸை முன்னெடுத்தும் செல்ல வேண்டும். அதைச் சரியாக செய்தால் நாங்கள் இன்னும் நல்ல அணியாகத் தெரிவோம் என நினைக்கிறேன்.’ தோல்விக்குப் பிறகு ரஷீத்கான் இப்படி பேசியிருக்கிறார்.
சரியாக என்ன பிரச்னையோ அதை ரஷீத் கான் அடையாளம் கண்டிருக்கிறார். இந்தத் தொடர் தொடங்கும்போது ‘எங்களை பௌலிங் அணி என்று சொல்வார்கள். ஆனால், நாங்கள் இப்போது பேட்டிங்கிலும் வலுவடைந்திருக்கிறோம்.’ என ரஷீத் கான் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால், அவரின் நம்பிக்கை கடைசியில் பொய்யாகத்தான் போயிருக்கிறது.
அவர் நம்பியதைப் போல பேட்டிங் ஆர்டர் முழுமையாக வலுவடைந்திருக்கவில்லை. டாப் ஆர்டர் மட்டும்தான் வலுவாக இருந்தது. மற்ற எந்த வீரரும் அணிக்கு தேவையான பங்களிப்பை அளிக்கவே இல்லை. ஓப்பனிங் இறங்கிய ரஹ்மானுல்லா குர்பாஸூம் இப்ராஹிம் ஷத்ரானும்தான் அத்தனை சுமையையும் தங்களின் தலைமேல் சுமந்துகொண்டிருந்தனர்.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக இந்த இணை நின்று 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பை அமைத்துக் காப்பாற்றியிருந்தது. வாழ்வா சாவா போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்த கூட்டணிதான் ரன் சேர்த்திருந்தது. குறிப்பாக, மிடில் என்ற ஒன்று இருப்பது போன்றே தெரியவில்லை. டாப் ஆர்டர் காலியானவுடனே டெய்ல் எண்டர்கள் வந்துவிடுவதைப் போலத்தான் இருந்தது ஆஃப்கானிஸ்தானின் பேட்டிங். இடையில் ரஷீத் கான் மட்டும் கொஞ்சம் சாகசம் செய்து கொண்டிருந்தார். மற்ற வீரர்களிடம் எந்த இண்டண்ட்டும் இல்லை.
இந்த உலகக்கோப்பையில் மொத்தமாக ஆஃப்கானிஸ்தான் அணி 1010 ரன்களை அடித்திருக்கிறது. இதில் குர்பாஸ் மற்றும் ஷத்ரான் ஓப்பனிங் இணை மட்டும் 510 ரன்களை அடித்திருக்கிறது. அதாவது 50 சதவிகித ரன்களை இவர்கள் மட்டுமே எடுத்திருக்கின்றனர். குர்பாஸ் மொத்தமாக 281 ரன்களையும் ஷத்ரான் மொத்தமாக 231 ரன்களையும் அடித்திருந்தார்.
இருவரும் கூட்டணியாக மூன்று 100+ பார்ட்னர்ஷிப்களை அமைத்திருந்தனர். நம்பர் 3-6 ஆர்டரில் இறங்கும் பேட்டர்களிடமிருந்து பெரிய பங்களிப்பு எதுவும் இல்லை. இந்தத் தொடரில் ஆஃப்கானிஸ்தான் ஆடியிருக்கும் 8 போட்டிகளிலும் சேர்த்து இந்த ஆர்டரில் இறங்கிய பேட்டர்கள் 303 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கின்றனர். 6 போட்டிகளில் இந்த ஆர்டரில் இறங்கிய பேட்டர்கள் மொத்தமாக சேர்த்தும் 30 ரன்களைக்கூட எடுக்கவில்லை. மிகமிக மோசமான பங்களிப்பு. இதனால்தான் குர்பாஸ் – ஷத்ரான் மீது அதிக சுமையும் அழுத்தமும் ஏற்பட்டது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த அரையிறுதிப் போட்டியில் அவர்களால் சோபிக்க முடியவில்லை. எனில், எதோ ஒன்று அல்லது இரண்டு மிடில் ஆர்டர் பேட்டர்கள் பொறுப்பை உணர்ந்து ஆடியிருக்க வேண்டும். அவ்வளவு வேகமாக விக்கெட் விடாமல் நின்று சமாளித்திருக்க வேண்டும். ஒரு 100 ரன்களை எட்டியிருந்தால் கூட பௌலிங் பலத்தை வைத்து ஆஃப்கானிஸ்தான் கடைசி வரை போராடியிருக்கும். ஆனால், மிடில் ஆர்டர் பேட்டர்களிடம் போராடுவதற்கான இண்டண்ட்டோ போட்டியளிப்பதற்கான தீரமோ கொஞ்சம் கூட இல்லை.
ஆஃப்கானிஸ்தான் அணி அபார வளர்ச்சியை அடைந்து வருகிறது. இருக்கும் ஒரு சில குறைகளையும் சரியாக கண்டடைந்து நிவர்த்தி செய்தால் சீக்கிரமே வலுவான அணி என்கிற அந்தஸ்தையும் கோப்பைகளையும் வெல்லும்.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணியின் பலம், பலவீனம் குறித்து கமென்ட்டில் தெரிவியுங்கள்!