ஹூண்டாய் வெளியிட்டுள்ள புதிய இன்ஸ்டெர் எலக்ட்ரிக் மைக்ரோ எஸ்யூவி கார் இந்திய சந்தைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக இந்த மாடல் 300 மற்றும் 355 கிலோமீட்டர் என இரண்டு விதமாக ரேஞ்ச் வெளிப்படுத்தும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Hyundai Inster Electric SUV
ஏற்கனவே ஒரு சில நாடுகளில் விற்பனையில் உள்ள ICE கேஸ்பெர் மாடலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள எஸ்யூவி காரில் சில ஸ்டைலிங் மாற்றங்கள் மற்றும் வெளிப்புறத் தோற்றத்தில் சில வித்தியாசங்களை ஏற்படுத்தி உள்ளது இன்டீரியர் அமைப்பில் பெரும்பாலும் கேஷ்பர் மாடலில் இருந்து பெறப்பட்ட பல்வேறு அம்சங்களும் இந்த காருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
விற்பனையில் உள்ள கேஸ்பெர் மாடலை விட 230மிமீ கூடுதல் நீளம் மற்றும் 180 மிமீ கூடுதலான வீல்பேஸ் கொண்டுள்ளது. 3,825 mm நீளம், 1,610 mm அகலம், மற்றும் 1,575 mm உயரம், மற்றும் 2,580 mm வீல்பேஸ் பெற்றுள்ளது.
ஹூண்டாய் இன்ஸ்டர் மாடலில் ஸ்டாண்டர்டு மற்றும் லாங் ரேஞ்ச் என இரண்டு பவர்டிரெய்ன் விருப்பங்களுடன் கிடைக்கும். 42 kWh பேட்டரி பேக் உள்ள ஸ்டாண்டர்டு மாடலில் 95 hp (71 kW) மற்றும் 147 Nm டார்க் கொண்ட ஒற்றை மின்சார மோட்டார் உள்ளது. சிங்கிள் சார்ஜில் 300 கிமீ பயணிக்க அனுமதிக்கிறது.
லாங் ரேஞ்ச் மாடல் 49 kWh திறன் கொண்ட சற்றே பெரிய பேட்டரியை பெற்று அதிகபட்சாக 113 hp (84.5 kW) ஒற்றை மின்சார மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. இந்த மாடல் 355 கிமீ ரேஞ்ச் வழங்கும் என WLTP மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
120 kW DC வேகமான சார்ஜிங் ஆதரவினை பெற்றுள்ள இன்ஸ்டர் வெறும் 30 நிமிடங்களில் 10-80 சதவிகிதம் சார்ஜ் செய்யலாம். பொதுவாகப் பயன்படுத்தப்படும் 11 kW AC அவுட்லெட்டுடன் இணைக்கப்பட்டால், ஸ்டாண்டர்ட் மாடலுக்கு 4 மணிநேரம் அல்லது நீண்ட தூர மாடலுக்கு 4 மணிநேரம் 35 நிமிடங்கள் முழு சார்ஜ் ஆகும். கூடுதலாக, V2L செயல்பாடு இ-பைக்குகள் மற்றும் கேம்பிங் கியர் போன்ற பிற சாதனங்களுக்கு இரு பக்க சார்ஜிங்கை அனுமதிக்கிறது.
அடுத்த சில மாதங்களில் இன்ஸ்டெர் எஸ்யூவி கொரியா சந்தையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளதால் மற்ற நாடுகளான ஐரோப்பா மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பசுபிஃக் பிராந்தியங்களுக்கு வரும் மாதங்களில் விற்பனைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.