சென்னை: “சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை முதல்வர் அளித்துள்ளார். முதல்வரின் அறிவுரைப்படி, அந்த மைதானத்தை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணியை இரண்டு வாரங்கள் முன்பு, நாம் கோவை சென்றபோது தொடங்கியுள்ளோம். இந்தாண்டில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்,” என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக் கடன்கள் துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கைகள்மீது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: “தமிழகத்தில் முதல்முறையாக கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் கடந்தாண்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டன. கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டன.
சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் 12 நாட்கள் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் இந்தியா முழுவதும் இருந்து 5 ஆயிரத்து 630 வீரர்கள் கலந்து கொண்டார்கள். பிரதமரும் தமிழக முதல்வரும் இந்த விளையாட்டுத் துவக்கப் போட்டியில் கலந்துகொண்டு பாராட்டினார்கள். இவ்வளவு சிறப்பான ஒரு கேலோ இந்தியா விளையாட்டு நிகழ்ச்சியை நான் எங்குமே பார்த்ததில்லை என்று பிரதமர் குறிப்பிட்டுப் பாராட்டினார். இந்த நேரத்தில் நான் இன்னொன்றையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்தக் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை நடத்த மத்திய அரசு சென்ற வருடம் மத்தியப் பிரதேச மாநிலத்துக்குக் கொடுத்த நிதி ரூபாய் 25 கோடி. இந்தமுறை தமிழகத்துக்கு மத்திய அரசு கொடுத்த நிதி வெறும் 10 கோடி.
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகளில், நம்முடைய தமிழக வீரர்கள், 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 98 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். கேலோ இந்தியா பதக்கப் பட்டியலில், தமிழ்நாடு முதல் மூன்று இடங்களுக்குள் வந்தது இதுவே முதல்முறை என்பதையும் மிகுந்த மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
விளையாட்டு வீரர்கள் நிறைந்த மணிப்பூர் மாநிலத்தில் சென்ற ஆண்டு உங்களுக்குத் தெரியும் கலவரங்கள் நடைபெற்றபோது, அங்கிருக்கக்கூடிய விளையாட்டு வீரர்கள், பயிற்சி பெற முடியாத சூழல் இருந்தது. இதனை உணர்ந்த தமிழக முதல்வர், அங்குள்ள விளையாட்டு வீரர்களை மணிப்பூர் விளையாட்டு வீரர்களை தமிழகத்துக்கு வந்து பயிற்சி மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில், முதல்வர் அழைப்பின் பேரில் சுமார் 20 மணிப்பூர் விளையாட்டு வீரர்கள், தமிழகத்துக்கு வந்து வாள்வீச்சு மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகளுக்காக 30 நாட்கள் சென்னையில் தங்கி பயிற்சி பெற்றார்கள்.
அவர்களுக்கான விமானப் பயணக் கட்டணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட அனைத்துச் செலவினங்களையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழக அரசே ஏற்றது.திராவிட மாடல் என்றால் என்னவென்று சிலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பெயர் தான் திராவிட மாடல் என்பதை என்பதை முதல்வர் நிரூபித்திருக்கிறார். தமிழகத்தில் பயிற்சி பெற்ற அந்த மணிப்பூர் வீரர்களில் இரண்டு பேர், கேலோ இந்தியா இளையோர் போட்டியில் 2 பதக்கங்களைக் வென்றனர் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் பன்னாட்டு கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை முதல்வர் அளித்துள்ளார். முதல்வரின் அறிவுரைப்படி, அந்த மைதானத்தை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யும் பணியை இரண்டு வாரங்கள் முன்பு, நாம் கோவை சென்றபோது தொடங்கியுள்ளோம். இந்தாண்டில் அதற்கான பணிகள் தொடங்கப்படும்,” என்றார்.