மங்களூரு,
தட்சிண கன்னடா மாவட்டம் குக்கே சுப்பிரமணியா கோவிலில் யானை ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த யானையிடம் ஆசி வாங்கிவிட்டு செல்வார்கள்.அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் வந்தார். இதையொட்டி அந்த யானை டி.கே.சிவக்குமாரை வரவேற்பதற்காக கோவில் நுழைவு வாயில் அருகே நின்று கொண்டிருந்தது. அந்த யானையுடன் பாகன், கோவில் நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த யானையின் அருகே குடிபோதையில் வாலிபர் ஒருவர் கோவிலுக்கு தள்ளாடிபடியே நடந்து வந்து கொண்டிருந்தார். அவரை பார்த்த யானை திடீரென்று கோபம் அடைந்து தும்பிக்கை வாலிபரை தாக்கி கீழே தள்ளியது. இதில் அந்த வாலிபருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை பார்த்த கோவில் நிர்வாகிகள் அந்த வாலிபரை மீட்டு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் கூறுகையில், குக்கே சுப்பிரமணியா கோவிலில் இருக்கும் யானை பல ஆண்டுகளாக இங்கு வளர்க்கப்பட்டு வருகிறது. கோவில் யானை என்பதால் பக்தியுடன் வருபவர்களை அது ஆசிர்வதிக்கும். சம்பவத்தன்று யானையின் அருகே நடந்து வந்த வாலிபர் குடிபோதையில் இருந்துள்ளார். அவர் மீது மதுபானம் குடித்த துர்நாற்றம் வீசியதால் கோபம் அடைந்து யானை அவரை தும்பிக்கையால் கீழே தள்ளிவிட்டுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.