“மோடியை பிரதமர் பதவியில் இருந்து தூக்குவதே இந்தியாவுக்கு நன்மை பயக்கும்” – ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 

சென்னை: “பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு நன்மை பயக்கும்,” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

இது தொடர்பாக வெள்ளிக்கிழமை சட்டப்பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், “தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் நீட் தேர்வு ரத்து குறித்த தனி தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானம் தவறானது; ஒருபோதும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். பாஜக கூட்டணியில் இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சியை நீட் தேர்வு வேண்டாம் என்று தீர்மானத்தை வரவேற்று இருக்கிறார்கள்.

முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி குறித்து பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். பாஜகவுக்கு யாரையும் விமர்சனம் செய்வதற்கு அருகதை கிடையாது. பாஜகவின் பத்தாண்டு கால ஆட்சி எப்படி இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். மிகவும் மோசமானது. அதுமட்டுமல்ல, நாட்டைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் தனியார் மயமாக்கி வந்தனர். இன்னும் கொஞ்சம் விட்டிருந்தால் நமது ராணுவத்தையும் தனியார் மயமாக்கி இருப்பார்கள். பிரதமர் மோடியை எவ்வளவு சீக்கிரம் பதவியில் இருந்து தூக்குகின்றோமோ அவ்வளவு சீக்கிரம் இந்தியாவுக்கு நன்மை பயக்கும். இவர்களுக்கு நாட்டின் விடுதலைக்காக போராடிய தலைவர்களை பற்றி எல்லாம் தெரியாது.



1980-ல் காந்தி படத்தை பார்த்துத்தான் காந்தியை பற்றி தெரிந்து கொண்டேன் என்று சொல்லக்கூடிய அளவில்தான் இன்றைய பிரதமர் இருக்கின்றார் என்றால் இவர்களது யோக்கியதை என்னவென்று பார்க்க வேண்டும். நாட்டுக்காக, நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் பாகிஸ்தானிடம் இருந்து நாட்டை காப்பாற்றியவர்கள். குறிப்பாக, இந்திரா காந்தியிடம் பாகிஸ்தான் வாலாட்டியது என்ற காரணத்துக்காகவே பாகிஸ்தானை இரண்டாக உடைத்து வங்க தேசத்தை ஏற்படுத்தினார். ஆகையால், அவரின் வீரச் செயலை புகழ வேண்டுமே தவிர பொறாமையின் காரணமாக அவரை விமர்சிப்பது தவறு,” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.