Virat Kohli : `இறுதிப்போட்டியிலும் அப்படி ஆடிவிடாதீர்கள் கோலி!' – ஏன் தெரியுமா?'

‘இந்தியான்னு வந்தா கோலிக்கிட்டதான் வந்தாகணும்!’ என்கிற குரல்கள் உலகக்கோப்பைக்கு முன்பாக வலுவாக ஒலித்துக் கொண்டிருந்தன. ஆனால், எதிர்பார்த்ததைப் போல விராட் கோலி இந்த உலகக்கோப்பையில் சோபிக்கவே இல்லை. இந்திய அணி இதுவரை ஆடிய அத்தனை போட்டிகளையும் வென்றிருக்கிறது. மகிழ்ச்சிதான். ஆனால், விராட் கோலி இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு பெர்ஃபார்ம் செய்யவே இல்லை. அதுமட்டும்தான் இந்திய அணிக்கு மிகப்பெரிய குறையாக இருக்கிறது.

இதுவரை இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி ஆடியிருக்கும் 7 போட்டிகளில் மொத்தமாக சேர்த்தே 75 ரன்களைத்தான் விராட் கோலி அடித்திருக்கிறார். விராட் கோலி மாதிரியான ஒரு மாபெரும் வீரரிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் சுமாரான செயல்பாடு இது. இத்தனைக்கும் விராட் கோலி ஐ.சி.சி தொடரென வந்துவிட்டால் தன்னுடைய ஆகச்சிறந்த செயல்பாட்டை எப்போதும் கொடுத்துவிடுவார். கடந்த 2022 டி20 உலகக்கோப்பையில் 296 ரன்களை அடித்து அந்தத் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராக கோலியே இருந்தார். 2023 ஓடிஐ உலகக்கோப்பைத் தொடரிலும் ஒட்டுமொத்தமாக அதிக ரன்களை எடுத்திருந்தது கோலிதான். எந்த ஒரு பெரிய தொடராக இருந்தாலும் விராட் கோலியை கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம். அவரின் பேட்டிலிருந்து ரன்கள் வந்துகொண்டே இருக்கும்.

முக்கியமான பெரிய போட்டிகளிலெல்லாம் அசத்திவிடுவார். ஆனால், இந்த உலகக்கோப்பை அவருக்கு அப்படியாக அமையவில்லை. அவர் பேட்டிலிருந்து ரன்னும் வரவில்லை. அரையிறுதி மாதிரியான பெரிய போட்டியிலும் அவர் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஆடவில்லை. விராட் கோலியிடம் என்னதான் பிரச்னை?

இந்திய அணி கைகொண்டிருக்கும் அணுகுமுறைதான் விராட் கோலிக்கு பிரச்னையாக இருக்கிறது. ‘அரைசதம், சதம் என எதைப் பற்றியும் யோசிக்காமல் அட்டாக்கிங்காக ஆடும் பாணியைத்தான் நாங்கள் கடைபிடிக்க விரும்புகிறோம்.’ என கேப்டன் ரோஹித் சர்மா எப்போதோ தெளிவுபடுத்திவிட்டார். வார்த்தைகளில் மட்டுமல்லாமல் இந்த இந்திய அணி முழுமையாக செயலிலும் அதை பின்பற்றுகிறது. விக்கெட்டுகள் விழுந்தாலும் வீரர்கள் கவலைப்படாமல் வந்தவுடனேயே பேட்டை வீசி பெரிய ஷாட்களுக்குச் செல்கின்றனர். தற்காப்பாக ஆடாமல் பாசிட்டிவ்வாக ஆடுகின்றனர்.

இந்த அணுகுமுறைதான் விராட் கோலிக்கு பிரச்னை. விராட் கொஞ்சம் நின்று செட்டில் ஆகி பெரிய ஸ்கோர்களை எடுக்கக்கூடியவர். ஆனால், இங்கே அவர் எந்தப் போட்டியிலுமே நின்று ஆட முயற்சிக்கவில்லை. வந்த வேகத்திலேயே அக்ரஸிவ்வாக ஆட முயற்சி செய்து அவரின் இயல்பை மீறிய ஷாட்களை ஆடியே அவுட் ஆகியிருக்கிறார்.

கோலிக்கு முதல் 10-20 பந்துகளை நிலைத்து நிற்பதற்காக எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் வேகம் கூட்டி பெரிய இன்னிங்ஸை ஆடுவார். 2022 உலகக்கோப்பையில் கோலி அதிக ரன்களை எடுத்திருப்பாரே அந்தத் தொடரில் கோலியின் ரன்ரேட் முதல் 20 பந்துகளில் 101 மட்டும்தான். பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு அபாரமான இன்னிங்ஸை ஆடியிருப்பாரே அந்தப் போட்டியிலெல்லாம் முதல் 20 பந்துகளில் 11 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். கடைசியில் அந்தப் போட்டியை வென்று கொடுத்த போது 53 பந்துகளில் 82 ரன்களை எடுத்திருந்தார். இதுதான் கோலியின் ஆட்டம். கோலியின் ஸ்டைல் இதுதான்.

‘இது விராட் கோலியின் ஆட்டமே இல்லை. அவர் சூழலைப் பொறுத்து ஆட வேண்டும். அவரின் இயல்பான ஆட்டத்தை ஆட வேண்டும். அவரால் கடைசிக்கட்டத்தில் சிறப்பாக வேகமாக ஆடி நல்ல ஸ்கோரை எட்டிவிட முடியும்.’ இது ரவி சாஸ்திரியின் கூற்று.

Virat

விராட் கோலி இந்த அணுகுமுறையை எடுத்தோம் கவிழ்த்தோம் என்றும் கைகொள்ளவில்லை. நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனின் இரண்டாவது பாதியில் கோலி மிரட்டியிருந்தார். ‘என்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டைப் பற்றி வர்ணனைப் பெட்டியில் அமர்ந்துகொண்டு பேசாதீர்கள்.’ என ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டு மிரட்டினார். ஆரம்பத்திலிருந்தே அதிரடியாகவும் அக்ரஸிவ்வாகவும் ஆடினார். அது அவருக்கு கையும் கொடுத்தது. பெங்களூரு அணியின் வெற்றிக்கும் உதவியது. அதனால்தான் விராட் கோலிக்கு அக்ரஸிவ் ஆட்டத்தின் மீது நம்பிக்கை வந்து, அதை உலகக்கோப்பையிலும் கடைபிடிக்க நினைத்தார். ஆனால், இங்கே அது கைகொடுக்கவில்லை.

அட்டாக்கிங் மனநிலையோடு ஆட வேண்டும் என சொல்லும் ரோஹித் கூடுதலாக சில விஷயங்களையும் சொல்கிறார். அதாவது, ‘கண்ணை மூடிக்கொண்டு பேட்டை வீச வேண்டும் என்கிற மனநிலையில் நாங்கள் இல்லை. சூழலைப் பொறுத்தே ஆட்டத்தை தகவமைத்துக் கொள்ள விரும்புகிறோம். நான் யாரையும் யார்க்கர் வீச சொல்லவில்லை. நான் யாரையும் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட சொல்லவில்லை. அவர்களாகத்தான் எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.’ என்றும் ரோஹித் பேசியிருக்கிறார். ஆக, ரோஹித் அட்டாக்கிங்காக ஆட வேண்டும் என விரும்புகிறார். ஆனால், அதை மட்டுமே செய்ய வேண்டும் என்றும் அவர் சொல்லவில்லை. சூழலைப் பொறுத்து அணுகுமுறையில் மாற்றம் செய்துகொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார். ஆனால், கோலிதான் விடாப்பிடியாக அக்ரஸிவ்வாக ஆட வேண்டும் என உறுதியாக இருக்கிறார்.

Virat

ஆடியிருக்கும் 7 போட்டிகளில் இரண்டே இரண்டு போட்டிகளில் மட்டும்தான் 10 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டிருக்கிறார். மீதமுள்ள 5 போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்திலேயே பந்துகளை எதிர்கொண்டிருக்கிறார். இரண்டு முறை டக் அவுட் ஆகியிருக்கிறார். எதற்கு இவ்வளவு அவசரம்?

அப்படி அட்டாக்கிங்காக மட்டும்தான் ஆட வேண்டுமெனில் கோலியை விட அட்டாக்கிங்காக ஆடக்கூடிய வீரர்கள் வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை அணிக்குள் எடுத்துக்கொள்ளலாம். இதே அட்டாக்கிங் பாணியைத்தான் இந்திய அணி கடைபிடிக்கப்போகிறதெனில் இந்த இந்திய அணிக்கு விராட் கோலி தேவையே இல்லை.

விராட் கோலியிடமிருந்து அவர் அனுபவமும் பக்குவமும் வெளிப்படக்கூடிய ஆட்டங்கள்தான் தேவை. அதற்காக நின்று நிதானமாக செட்டில் ஆகி மந்தமான ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடும் ஆட்டமும் தேவையில்லை. அவசரகதியில் ஆடும் ஆட்டமும் தேவையில்லை. இரண்டுக்குமிடையே ஒரு கோட்டை கோலிதான் வரையறுக்க வேண்டும். அப்படி ஒரு ஆட்டத்தைதான் அணியும் அவரிடம் எதிர்பார்க்கிறது. இறுதிப்போட்டியிலாவது அப்படி ஒரு ஆட்டத்தை விராட் கோலி ஆட வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.