குடும்பத்துக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசம்: பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை; மராட்டிய பட்ஜெட்டில் அறிவிப்பு

மும்பை,

மராட்டிய சட்டசபையில் 2024-25-ம் ஆண்டுக்கான கூடுதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. வருகிற அக்டோபர் மாத வாக்கில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் வாக்காளர்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டங்கள் இருக்கும் என எதிர்பாா்க்கப்பட்டது. எதிர்பார்த்தபடி நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. குறிப்பாக பெண்களுக்கான திட்டங்களை துணை முதல்-மந்திரியும், நிதி இலாகாவை கவனித்து வரும் அஜித்பவார் அடுக்கினார்.

இதில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்கும் திட்ட அறிவிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 21 முதல் 60 வயது வரை உள்ள தகுதியான பெண்களுக்கு மாநில அரசு மாதந்தோறும் ரூ.1,500 உதவித்தொகை வழங்க உள்ளது. இந்த திட்டத்துக்காக ரூ.46 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட உள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் (ஜூலை) முதலே அமலுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதவிர பல்வேறு பெண்கள் நலத்திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* பெண் குழந்தைக்கு ரூ.1 லட்சம் :- 2023-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு மஞ்சள், ஆரஞ்சு குடும்ப அட்டை வைத்திருக்கும் வீட்டில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு 18 வயது வரை ரூ.1 லட்சத்து 100 வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

* ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம் :- “முக்கிய-மந்திரி அன்னப்பூர்ணா யோஜனா” திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 52 லட்சத்து 16 ஆயிரத்து 412 குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

* பெண்களுக்கு இலவச உயர்கல்வி :- பட்ஜெட்டில் பெண்களுக்கு இலவசமாக உயர் கல்வி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி டிப்ளமோ, பொறியியல், கட்டிடக்கலை, பார்மசி, மருத்துவம், வேளாண்மை போன்ற உயர்படிப்பு படிக்கும் இதர பிற்படுத்தப்பட்ட, ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இலவசமாக கல்வி வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் மூலம் 2.05 லட்சம் பெண்கள் பயன் பெறுவார்கள். இந்த திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி செலவாகும்.

இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.