மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஒடிசா முதல்வர் மோகன் மாஜி

புதுடெல்லி: ஒடிசாவில் புதிதாக முதல்வர் பதவியேற்ற மோகன் சரண் மாஜி, புதுடெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றது. மாநிலத்தின் முதல்வராக பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மோகன் சரண் மாஜி, பதவியேற்றார். துணை முதல்வர்களாக பாஜகவின் மூத்த தலைவர்கள் கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரவாதி பரிதா ஆகியோர் பொறுப்பேற்றனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற முதல்வர் மோகன் மாஜி, துணை முதல்வர்கள் கனக்வர்தன் சிங் தியோ, பிரவாதி பரிதா ஆகியோர், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரைச் சந்தித்தனர்.



மூன்றாம் நாளான இன்று, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு மூவரும் சென்று மலர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மோகன் மாஜி, “ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அவருக்கு மலரஞ்சலி செலுத்தினேன். ஒடிசாவை முன்னேற்றுவதற்கான உறுதிமொழியை அப்போது எடுத்துக்கொண்டேன். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடத்துக்குச் சென்று மலரஞ்சலி செலுத்தினேன். வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் கனவை நனவாக்க நான் பாடுபடுவேன்” என தெரிவித்தார்.

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோரை இன்று சந்திக்க உள்ள ஒடிசா முதல்வர் மற்றும் துணை முதல்வர்கள், இன்று மாலை டெல்லியில் வசிக்கும் ஒடிசா மக்களைச் சந்திக்க உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.