போட்டியில் வெற்றி பெற வகுத்த வியூகம் என்ன…? ரோகித் சர்மா பதில்

பார்படாஸ்,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி பார்படாஸ் நகரில் இன்று நடந்தது. இதில், இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த இந்திய மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடின. போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

இதனால், தென்ஆப்பிரிக்க அணிக்கு 177 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும், 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு அந்த அணி 169 ரன்களே எடுத்தது. இதனால், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை தட்டி சென்றது.

வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். இந்த தொடரின் ஆட்ட நாயகனாக விராட் கோலியும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ராவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன்பின்பு, ஜெய்ஷாவிடம் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித், சாம்பியன் கோப்பையை பெற்று கொண்டார்.

அவர் பேசும்போது, இந்த போட்டியில் பெற்ற வெற்றி இன்று ஒரு நாளில் கிடைத்தது அல்ல. இதற்காக கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக நாங்கள் கடுமையாக உழைத்தோம். நேர்மையாக, நாங்கள் தனிநபர்களாகவும், ஓரணியாகவும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டோம். போட்டியில் நாங்கள் இன்று வெற்றி பெற்று இருப்பதற்கு பின்னணியில் நிறைய நடந்திருக்கின்றன.

அதனாலேயே, இன்று எங்களுக்கு இந்த முடிவு கிடைத்திருக்கிறது. கடந்த காலங்களில் அதிக நெருக்கடியான போட்டிகளை நாங்கள் நிறைய விளையாடினோம். ஆனால், தவறான பகுதியிலேயே இருந்தோம். ஆனால், எது தேவையாக உள்ளது என வீரர்கள் புரிந்து கொண்டு செயல்பட்டனர்.

எது தேவையோ, அதனை செய்ததில் இன்றைய தினம் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. ஓரணியாக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டோம். விராட் கோலி சிறப்பாக விளையாடுவார் என்பதில் எனக்கோ மற்றும் வேறு எவருக்கோ சந்தேகமே இருந்தது இல்லை. அவருடைய தரம் பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம். 15 ஆண்டுகளில் அவருடைய போட்டியில் உச்சம் தொட்டிருக்கிறார் என்றார்.

அவர், போட்டியில் வெற்றி பெற்றதற்கான வியூகங்களை பற்றி குறிப்பிடும்போது, இந்த ரன்கள் எங்களுக்கு கிடைக்க, குழு முயற்சியே காரணம். போட்டியில் எவரேனும் ஒரு வீரர் நிலைத்து ஆட வேண்டும் என நாங்கள் விரும்பினோம். விராட் கோலி தன்னுடைய அனுபவங்களை கொண்டு அதனை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். அவரை சுற்றி விளையாடிய வீரர்களும் உண்மையில் சிறப்பாக ஆடினர். அக்சர் பட்டேலின் 47 ரன்களும் அதிக முக்கியம் வாய்ந்தவை என்றார். (போட்டியில் கோலி அடித்த 76 ரன்கள், இந்திய அணி 176 என்ற சவாலான இலக்கை நிர்ணயிக்க உதவியது.)

பும்ரா திறமையாக விளையாடினார். அவரிடம் இருந்து சிறந்த ஆட்டம் வெளிப்பட்டது. கடைசி ஓவரை ஹர்திக் திறமையாக கையாண்டார். அணி வீரர்கள் அனைவரின் விளையாட்டும் அற்புதம். நியூயார்க்கில் இருந்து பார்படாஸ் வரை அவர்களால் நான் முழுவதும் பெருமை அடைகிறேன். அவர்களுக்கு என்னுடைய வணக்கங்களை தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்தியாவில் இது இரவு நேரம். கோடிக்கணக்கானோர் அமர்ந்து, போட்டியை காண்பார்கள். எங்களை போன்று அவர்களும் நீண்டகாலம் காத்திருந்து வருகின்றனர். இது அவர்களுக்கானது. நாங்கள் இன்று படைத்த சாதனைக்காக மிக அதிக பெருமை கொள்கிறோம் என கூறியுள்ளார். இதன்பின்பு வீரர்கள் ஒவ்வொருவருக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.