அம்மாடி…! டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

ICC T20 World Cup 2024 Prize Amount: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 (ICC T20 World Cup 2024) தொடரின் சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது. 2007ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றிருப்பதால் நாடே கொண்டாட்டத்தில் இருக்கிறது எனலாம். இந்திய நாட்டின் முதல் குடிமகன் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதல் நாட்டின் கடைக்கோடியில் வசிக்கும் பாமரன் வரை அனைவரும் இந்திய கிரிக்கெட் அணியை உச்சிமுகர்ந்து கொண்டாடி வருகின்றனர். 

இந்திய அணிக்கு இது மிகப்பெரிய வெற்றி எனலாம். 2013ஆம் ஆண்டில் ஐசிசி சாம்பியன் டிராபி தொடருக்கு பின் பலமுறை ஐசிசி தொடர்களில் நாக்-அவுட் சுற்றுக்கு வந்து கோப்பையை கோட்டைவிட்டிருந்தது இந்திய அணி. அந்த துயரமான தொடர்கதைக்கு இந்திய அணி சிறப்பாக முற்றுப்புள்ளி வைத்து முடித்துள்ளது. இந்த சிறப்பான வெற்றியோடு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக தற்போது கோப்பை வென்ற கேப்டன் ரோஹித் சர்மாவும், முன்னாள் கேப்டன் விராட் கோலியும் தெரிவித்துள்ளனர். 

பரிசுத்தொகை விவரம்

நடப்பு தொடர் கடந்த 28 நாள்களாக நடைபெற்றது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற இந்த 54 போட்டிகளும் மொத்தம் 9 மைதானங்களில் நடத்தப்பட்டது. இந்திய ஒளிபரப்புகிற்காக இந்திய அணி மோதும் போட்டிகள் மட்டும் அங்கு காலையில் நடைபெற்றன. மற்ற அனைத்து போட்டிகளும் இரவிலேயே நடந்தன. இந்த தொடரின் குரூப் சுற்று போட்டிகளில் 20 அணிகள் பங்கேற்றன. அதன்பின் இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 12 அணிகள் வெளியேற 8 அணிகள் அடுத்த சூப்பர் 8 சுற்றுக்கு வந்தன.

இந்நிலையில் நேற்றைய இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. அந்த வகையில், ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் மொத்தம் பரிசுத்தொகை குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதாவது, வெற்றி பெற்ற இந்திய அணிக்கு, இறுதிப்போட்டிக்கு வந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு, அரையிறுதிக்கு வந்த ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கு, சூப்பர் 8 சுற்றுக்கு வந்த அணிகளுக்கு என மொத்தம் யார் யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை என்ற விவரத்தை இதில் விரிவாக காணலாம்.

கடைசி 12 அணிகளின் நிலவரம்

அதன்படி மொத்த பரிசுத்தொகை 11.25 மில்லியன் அமெரிக்க டாலராகும். அதாவது இந்திய மதிப்பின் ரூ.93 கோடியாகும். இதில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறும் அணிக்கு 31,154 அமெரிக்க டாலர் (ரூ.26 லட்ச ரூபாய்) வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி குரூப் சுற்றோடு வெளியேறி தொடரில் 13ஆவது முதல் 20ஆவது இடம் பிடித்த கடைசி 8 அணிகளுக்கு தலா 225,000 அமெரிக்க டாலராகும் (1.87 கோடி ரூபாய்) பரிசுத்தொகையாக கொடுக்கப்பட்டது. 

மேலும், குரூப் சுற்றோடு வெளியே தொடரில் 9ஆவது முதல் 12ஆவது இடம் பிடித்த 4 அணிகளான பாகிஸ்தான், இலங்கை, ஸ்காட்லாந்து, நியூசிலாந்து ஆகியவைக்கு தலா 247,500 அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.2 கோடி. அடுத்து சூப்பர் 8 சுற்றில் தோல்வியடைந்து வெளியேறிய ஆஸ்திரேலியா, வங்கதேசம், மேற்கு இந்திய தீவுகள், அமெரிக்கா ஆகிய அணிகளுக்கு தலா 382,500 அமெரிக்க டாலர்கள் (ரூ.3.16 கோடி) வழங்கப்பட்டது.

டாப் 4 அணிகளின் பரிசுத் தொகை

தொடர்ந்து அரையிறுதியில் தோல்வியடைந்த ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு தலா 787,500 அமெரிக்க டாலர்கள் (ரூ.6.48 கோடி) வழங்கப்பட்டது. தொடர்ந்து, இறுதிப்போட்டி வரை வந்த தென்னாப்பிரிக்காவுக்கு 1.28 அமெரிக்க மில்லியன் (ரூ.10.67) பரிசாக வழங்கப்பட்டது. கோப்பையை கைப்பற்றி இந்திய அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.20.40 கோடி) பரிசாக வழங்கப்பட்டது. இதுதான் டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே பரிசாக கொடுக்கப்பட்டத்தில் அதிகபட்ச தொகையாகும். 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்தியா அப்போது 1.2 மில்லியன் அமெரிக்க டாலரை பரிசுத் தொகையாக பெற்றது. கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி ரூ.1.6 மில்லியன் பரிசுத்தொகையாக பெற்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.