T20 World Cup: `கனவுக்கோப்பையை கைப்பற்றி களத்தில் கண்ணீர்' – இந்திய அணிக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்து

இந்தியா ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது. 2011-க்குப் பிறகு உலகக்கோப்பைத் தொடர்களில் இந்தியாவுக்கு எத்தனையோ முக்கியமான தருணங்கள் சாதகமாக கைகூடாமல் போயிருக்கின்றன. ஆனால், இந்த முறை போட்டியே கையைவிட்டு சென்றுவிட்டது எனத் தோன்றிய நிலையிலிருந்து மீண்டு வந்து, இந்தியா சாதனை புரிந்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்று மிரட்டியிருக்கிறது. 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றிருக்கிறது.

ஏற்கெனவே 2007-ம் ஆண்டில் முதலாவது 20 ஓவர் உலகக் கோப்பையை தோனியின் தலைமையில் வென்றிருந்த நிலையில், இது இரண்டாவது வெற்றியாகும். 20 ஓவர் உலகக் உலகக்கோப்பை கிரிக்கெட் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்ற நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “எங்கள் இந்திய அணி 2-வது முறை டி20 உலக கோப்பையை முழு அதிகாரத்துடன் வென்றதை கொண்டாடுவதில் மகிழ்ச்சி! நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் நிகரற்ற திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனை படைத்துள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “17 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா மற்றும் இந்திய அணிக்கு வாழ்த்துகள். டி20 உலகக்கோப்பை 2024 இறுதிப் போட்டியின் கடைசி ஓவர்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. தலைசிறந்த டெத் ஓவர்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சூர்யகுமார் யாதவின் கேட்ச் அற்புதமானது. தொடக்கம் முதலே சிறப்பாக இந்திய அணி செயல்பட்டது. வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அற்புதமான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். ஆட்டத்தின் ஒரு கட்டத்தில் இந்திய அணிக்கு எதிரான சூழல் இருந்தபோதும், அணி கைவிடாமல், தொடர்ந்து விக்கெட்டுகளை கைப்பற்றியது. இறுதியில் ஒரு கேட்ச் வெற்றியை உறுதிப்படுத்தியது! தொடர் முழுக்க சாம்பியன்களை போன்றே விளையாடினார்கள், இந்திய அணிக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையில் அற்புதமாக விளையாடி வெற்றியை பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த ஐசிசி கோப்பையை வெல்வதற்கு நம்முடைய சாம்பியன் அணி முழு தகுதி பெற்றிருப்பதில் சந்தேகமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கடும் நெருக்கடிகளை கடந்து ஆட்டத்தை வென்றெடுத்து இறுதியில் உலக கோப்பையை உறுதி செய்துள்ளது இந்திய அணி! மதம்-இனம் கடந்து இந்திய நாட்டிற்காக வியர்வை சிந்தி விளையாடி கனவுக்கோப்பையை கைப்பற்றி களத்தில் கண்ணீர் சிந்தியுள்ளனர் இந்திய வீரர்கள்! இந்திய நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ள இந்திய அணியினருக்கு ஒட்டுமொத்த நாடும் தலை வணங்குகிறது!” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். 13 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டுக்கு மற்றொரு பெருமையான தருணம் இது. ரோஹித ஷர்மா-வின் தலைமை, இறுதிப் போட்டியில் கோப்பையை வென்ற விராட் கோலி, மற்றும் ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு இந்திய கிரிக்கெட் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும். ராகுல் டிராவிட் சிறப்பாக பணியாற்றியுள்ளார். தகுதியான வெற்றி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அமைச்சர் அன்பில் மகேஸ், “எங்கள் இந்தியா அணியின் இரண்டாவது #T20 உலகக் கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதை கொண்டாடுவதில் மகிழ்ச்சி! நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனையுடன் முடித்திருக்கிறது. இந்திய அணிக்கு வாழ்துகள்!” எனத் தெரிவித்திருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.