சூர்யகுமார் யாதவ் பிடிச்ச கேட்ச் சிக்ஸ், மில்லர் அவுட் இல்லை – அம்பயர் மீது பரபரப்பு புகார்

சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் பர்படாஸில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி உலகக்கோப்பையை மீண்டும் ஒருமுறை கைப்பற்றி அசத்தியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதி ஓவரில் தென்னாப்பிரிக்க அணியின் வீரர் டேவிட் மில்லர் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். பவுண்டரி லைனில் இருந்த சூர்யகுமார் யாதவ் பிரதமாதமாக பிடித்த அந்த கேட்ச் தான் இந்திய அணியின் வெற்றியையும் உறுதி செய்தது. ஆனால், தற்போது அந்த கேட்ச் சர்ச்சைக்குள்ளானதாக மாறியிருக்கிறது. 

தென்னாப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா அந்த ஓவரை வீச வந்தார். முதல் பந்தை ஸ்லோ புல்டாஸாக வீச, ஸ்டிரைக்கில் இருந்த டேவிட் மில்லர் சிக்சருக்கு அந்த பந்தை தூக்கி அடித்தார். கேமரா மேன் பந்தை போகஸ் செய்து திரையில் காண்பித்ததால், எல்லோரும் அந்த பந்து சிக்சருக்கு சென்றுவிட்டது என்றே எண்ணினர். ஆனால், கடைசி நொடியில் தான் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த சூர்யகுமாரின் உருவம் தெரியவந்தது. அவர், அநாயசமாக செயல்பட்டு சிக்சருக்கு செல்ல வேண்டிய அந்த பந்தை கேட்ச் பிடித்து மில்லரை அவுட்டாக்கினார். அந்த நொடியே இந்திய அணியின் உலகக்கோப்பை கனவும் நனவானது. ஆனால், பவுண்டரி லைனில் சூர்யகுமார் பிடித்த கேட்சை மூன்றாவது நடுவர் முறையாக செக் செய்யவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

சூர்யகுமார் யாதவின் ஷூ பவுண்டரி எல்லையை லைட்டாக டச் செய்திருக்கிறது என்றும், அதனை அம்பயர் ஏன் ஜூம் செய்து பார்க்கவில்லை என்றும் கேள்வி எழுந்துள்ளது. மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் சிக்கலான அந்த கேட்சை வெறுமனே இரண்டு ஆங்கிளில் இருந்து மட்டும் பார்த்துவிட்டு உடனடியாக அது அவுட் என அவசர அவசரமாக அறிவித்தது ஏன்? என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பியுள்ளனர். அத்துடன் சூர்யகுமாரின் ஷூ பவுண்டரி லைனில் மோதுவதுபோல இருக்கும் கேமரா ஆங்கிள் புகைப்படத்தையும் இணையத்தில் ஷேர் செய்து, இந்திய அணிக்கு சாதகமாக மூன்றாவது நடுவர் நடந்து கொண்டதாக பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். 

நியாயமாக இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தென்னாப்பிரிக்க அணிக்கு தான் சென்றிருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேநேரத்தில் அப்படி எல்லாம் ஒருதலைப்பட்சமாக அவுட் கொடுக்க வாய்ப்பில்லை என்றும் மற்றொரு தரப்பினர் விளக்கவுரை எழுதிக் கொண்டிருப்பதால் சமூகவலைதளமே ஒரு ரணகளமாக இருக்கிறது. கூடவே, 20 ஓவர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகளும் இடைவிடாமல் பறந்து கொண்டிருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.