கோவை: “தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளனர். தரவுகள் வழங்க வேண்டும் என்பதால் நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் செல்ல மறுக்கின்றனர்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக சார்பில் கோவை மக்களவை தொகுதி ஆய்வு கூட்டம் அவிநாசி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று (ஜூன் 30) நடந்தது. இதில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தமிழகம் முழுவதும் பாஜக போட்டியிட்ட இடங்களில் கட்சி செயல்பாட்டை ஆய்வு செய்ய முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் வந்துள்ளார். வேட்பாளராக போட்டியிட்டதால் நானும் வந்துள்ளேன். ஆறு சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள பொறுப்பாளர்களை சந்தித்துள்ளோம். அடுத்த தேர்தலுக்கு தயாராவது, கடந்த தேர்தலில் தோல்விக்கான காரணத்தை ஆராயும் பணிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.
சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் கூறியதை சிலர் நகைச்சுவையாக பார்த்தாலும் நாங்கள் கள்ளக்குறிச்சி சென்ற போது டாஸ்மாக் மதுபான போதை போதவில்லை என்று தான் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்வதாக அங்குள்ளவர்கள் கூறினர். டாஸ்மாக் மதுபானத்தின் தரம் ஆய்வு செய்யப்படுகிறதா என்றால் கேள்விக்குறிதான்.
மூத்த அமைச்சரே அரசு வேலை செய்யவில்லை என சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்டுள்ளார். சென்னையில் சுகாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. அதை பற்றி எல்லாம் சட்டப்பேரவையில் பேசுவதில்லை.
கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு தேடிச் சென்று ரூ.10 லட்சம் வழங்கும் நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு சிறப்பு ஊதியத்தை தமிழக அரசு வழங்கவில்லை. இது கண்டனத்துக்குரியது.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் தவறில்லை. இருப்பினும் அத்தகைய பயணங்களால் பெறப்பட்ட முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கவும் டாஸ்மாக் மதுபான கடைகள் எண்ணிக்கையை குறைக்கவும் வலியுறுத்தி வருகிறோம்.
தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியுள்ளனர். தரவுகள் வழங்க வேண்டும் என்பதால் நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் செல்ல மறுக்கின்றனர். மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்கள், கர்நாடக முதல்வர் சித்தராமையாவை ஏன் நேரில் சென்று சந்திப்பதில்லை” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார்.