ராஜ்கோட்: மத்திய பிரதேசம், டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் கனமழை காரணமாக ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.
கனமழை காரணமாக டெல்லிவிமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதியில் உள்ள மேற்கூரை நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இதில் கார் டிரைவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அங்கு விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதேபோல் மத்திய பிரதேசத்தில் கனமழை காரணமாக ஜபல்பூர் விமான நிலையத்தின் மேற்கூரையில் தண்ணீர் அதிகளவில் தேங்கியது. இதனால் அந்த மேற்கூரை 2 நாட்களுக்கு முன் இடிந்து விழுந்தது. இதில் யாரும் காயம் அடையவில்லை.
இந்நிலையில் குஜராத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ராஜ்கோட் விமான நிலையத்தில் பயணிகள் இறங்கும் பகுதியில் உள்ள மேற்கூரையில் தண்ணீர்தேங்கியது. இதை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
கடந்த 3 நாட்களில், 3 விமானநிலையங்களில் உள்ள மேற்கூரை கனமழை காரணமாக இடிந்து விழுந்துள்ளது. இதையடுத்து நாட்டில் உள்ள அனைத்துவிமான நிலையங்களின் மேற்கூரை வடிவமைப்பை ஆய்வு செய்ய விமான போக்குவரத்து துறை உத்தரவிட்டு உள்ளது.