விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணியை ஆதரித்து பாப்பனப்பட்டு, பனையபுரம், பனப்பாக்கம், தொரவி, கயத்தூர், சிறுவள்ளிகுப்பம், வாக்கூர் கிராமங்களில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: “உங்கள் ஊரைச் சேர்ந்தவர் எம்எல்ஏவாக நீங்கள் பாமகவை ஆதரிக்கவேண்டும். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் இங்கு வந்துள்ள பெண்களுக்கான தேர்தல் இதுவாகும். இத்தொகுதியில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா? திமுக வேட்பாளர் சிவா வெற்றி பெற்றால் அவர் நன்றாக இருப்பார். இப்பதவி முடிய இன்னும் 2 ஆண்டுகளாகும்.
ஆனால் பாமக வெற்றி பெற்றால் நீங்கள் நன்றாக வாழ்வீர்கள். மதுக்கடைகளை மூட பாமகவை ஆதரியுங்கள். இது தியாகிகள் வாழ்ந்த மண்ணாகும். இப்பகுதியில் அரசு வேலையில் இருப்பவர்கள் என்று எடுத்துக்கொண்டால் யாருமே இல்லை. இதற்காகவா நம் முன்னோர்கள் தியாகம் செய்துள்ளார்கள். இச்சமூகத்திற்கு திமுக துரோகம் செய்து வருகிறது.
திமுகவின் இருண்ட காலம் தற்போது ஸ்டாலின் ஆட்சிதான். சமூகநீதிக்கு ஸ்டாலின் மற்றும் அவரின் தலைமையில் உள்ள அமைச்சர்கள் எதிரானவர்கள். வாக்குகளை காசு கொடுத்து வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். உங்கள் கோபத்தை காண்பிக்க நல்வாய்ப்பு இத்தேர்தலாகும்.
கள்ளகுறிச்சியில் இறந்தவர்களை திமுக அரசு கொலை செய்துள்ளது. மகளிர் உரிமை தொகையாக கொடுக்கும் பணம் உங்கள் வீட்டில் உள்ளவர்களால் டாஸ்மாக்குக்கு கொடுக்கும் பணமாகும். இத்தேர்தலில் நல்ல முடிவெடுங்கள்.
பாமக வெற்றி பெற்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். திமுக தோற்றால் அவர்களுக்கு நம்மீது பயம் வரும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தபோது அழாத ஜெகத்ரட்சகன் கஞ்சா வழக்கில் சிக்கியுள்ளவருக்காக கதறி கதறி அழுகிறார். ஏனெனில் அவர் உங்கள் கட்சிக்காரர்” இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பாப்பனப்பட்டு கிராமத்தில் சௌமியா அன்புமணி பேசும்போது, “இட ஒதுக்கீடு கொடுக்கமுடியாது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தமுடியாது என்பவர்களுக்கு எத்தனை நாள் வாக்களித்து ஏமாறப்போகிறீர்கள்? இட ஒதுக்கீடு பெற பாமகவை ஆதரியுங்கள்” என்றார். இதனை தொடர்ந்து அதனூர், வெங்கந்தூர் கிராமங்களில் சௌமியா அன்புமணி பிரச்சாரம் மேற்கொண்டார்