நீட் தேர்வு வினாத்தாள் கசிவு வழக்கு – குஜராத்தில் பள்ளி உரிமையாளர் கைது

கோத்ரா,

இளநிலை மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடந்தது நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சுமார் 6 வழக்குகள் பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், குஜராத், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை, விசாரணை என தங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

குஜராத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் அதிகாரிகள், அங்கு தேர்வு நடந்த பள்ளிகளில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கே அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.அந்தவகையில் பஞ்ச்மகால் மாவட்டத்தின் கோத்ராவில் இயங்கி வரும் ஜெய் ஜலராம் பள்ளி என்ற தனியார் பள்ளியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். பின்னர் அந்த பள்ளியின் உரிமையாளர் தீக்ஷித் படேல் என்பவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இவர் நீட் தேர்வில் வெற்றி பெற வைப்பதாக கூறி தனது பள்ளியில் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலரிடம் ரூ.10 லட்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில் அவரிடம் விசாரணை நடத்தி வந்த அதிகாரிகள் நேற்று அதிகாலையில் அவரது வீட்டில் வைத்து தீக்ஷித் படேலை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை ஆமதாபாத் கொண்டு சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இவரையும் சேர்த்து குஜராத்தில் நீட் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்து இருக்கிறது.

நீட் முறைகேடு விவகாரத்தில் தனியார் பள்ளி உரிமையாளர் கைது செய்யப்பட்ட விவகாரம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.