நைஜீரியா: குழந்தையை சுமந்தபடி தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்திய பெண்; 18 பேர் பலி

போர்னோ,

நைஜீரியா நாட்டில் விடுமுறை நாளான ஞாயிறன்று, அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளன. இதில் சிக்கி பலர் பலியாகி உள்ளனர். அந்நாட்டின் வடகிழக்கே அமைந்த போர்னோ மாகாணத்தில் முதலில், திருமண நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு நடந்தது.

இதனை தொடர்ந்து, குவோஜா நகரில் உள்ள பொது மருத்துவமனையில் மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது. இதன்பின்னர் இறுதி சடங்கு நிகழ்ச்சி ஒன்றில் குண்டுவெடிப்பு நடந்தது.

அந்நாட்டின் போர்னோ மாகாண அவசரகால மேலாண் கழகத்தின் இயக்குநர் ஜெனரல் பர்கிந்தோ முகமது சையது, குவோஜா நகரில் சம்பவ பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

போகோ ஹரம் என்ற போராளி குழுவினர் பத்து ஆண்டுகளாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் நடத்தி வரும் வன்முறை சம்பவத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். எனினும், இந்த தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்கவில்லை.

இதில், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில், 19 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 23 பேர் சிகிச்சை முடிந்து செல்ல உள்ளனர்.

இதேபோன்று, திருமண நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கில் 3-வது குண்டுவெடிப்பு நடந்துள்ளது. குழந்தையை முதுகில் சுமந்தபடி வந்த பெண் ஒருவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளார் என கூறப்படுகிறது. 2 இடங்களிலும் பெண்கள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.