பெர்ன்,
சுவிட்சர்லாந்து நாட்டின் தெற்கே மேகியா பள்ளத்தாக்கு பகுதியில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, பல இடங்களில் நில சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன.
இதில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டு, அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் வலாய்ஸ் கேன்டன் காவல் துறை வெளியிட்ட செய்தியில், பின் என்ற கிராமத்தில் 52 வயது நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என தெரிய வந்தது.
இதுபற்றிய விசாரணையில், சாஸ்-கிரண்ட் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் அந்த நபர் உயிரிழந்து கிடக்கிறார் என தெரிய வந்தது என தெரிவித்தனர். இதுதவிர லாவிஜாரா பகுதியில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
வலாய்ஸ் கேன்டன் பகுதியில் மற்றொரு நபர் காணாமல் போயுள்ளார். இதனால், மொத்தம் 2 பேர் காணாமல் போயுள்ளனர். சுவிட்சர்லாந்தின் அண்டை நாடான இத்தாலி நாட்டிலும், வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். காக்னி பகுதியில் இருந்து 200 பேரும், ஆல்பைன் கிராமத்தில் இருந்து 120 பேரும் மீட்கப்பட்டு உள்ளனர்.