காவல்துறை பயிற்சிக்கூடத்தில் நடக்கும் அடக்குமுறைகளையும் அதைத் தொடர்ந்து ஹீரோ சந்திக்கும் பிரச்னைகளையும் பேசிய படம் ‘டாணாக்காரன்’. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கியிருந்தார். ‘வடசென்னை’, ‘ஜெய் பீம்’ எனப் பல படங்களில் நடிகராகவும் அறியப்பட்ட தமிழ், நடிப்பிற்கு ஒரு சின்ன பிரேக் கொடுத்துவிட்டு மீண்டும் இயக்குநராக தன் அடுத்த படத்திற்கு ரெடியாகிறார். படத்தின் ஹீரோ கார்த்தி.
ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்துத்தான் இன்னொரு படம் என்ற பாலிஸியை கடைப்பிடிப்பவர் சூர்யா. ‘ஜப்பான்’ படத்திற்கு முன்வரை கார்த்தியும் அதே பாலிஸியில்தான் இருந்தார். ஆனால், ‘மெய்யழகன்’, ‘வா வாத்தியார்’, ‘சர்தார் 2’ என வரிசையாகக் கைவசம் படங்கள் வைத்திருக்கிறார். இதனையடுத்து ‘டாணாக்காரன்’ தமிழ் படத்திலும் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல் இனி…
நடிகர், இயக்குநர் ஆவதற்கு முன்னர் போலீஸாக இருந்தவர் தமிழ். சினிமா ஆர்வத்தினால் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகச் சேர விரும்பியவர். ஆனால், வெற்றியோ அவரை ‘வடசென்னை’யில் நடிகராக்கினார். தொடர்ந்து ‘ஜெய் பீம்’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’ எனப் பல படங்களில் நடித்து வந்தார் தமிழ். இடையே விக்ரம் பிரபுவை வைத்து ‘டாணாக்காரன்’ என்ற படத்தை இயக்கினார்.
தன் காவல்துறை அனுபவங்களை வைத்து அங்கு நடக்கும் அழுக்குகளைத் துணிந்து திரைக்கதையாகக் கொடுத்திருந்தார் அவர். காவல்துறை அதிகாரிகள் ஏன் இவ்வளவு மூர்க்கமாகவும், சாமானியர்களை ஏளனமாகவும் பார்க்கிறார்கள் என்பதற்குப் பின்னிருக்கும் உளவியல் குறித்து நன்கு ஆராய்ந்து இந்தப் படைப்பினை எழுதியதால், படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. விக்ரம் பிரபு சினிமா கரியரிலும் ஒரு பென்ச் மார்க் ஆக வரவேற்பை அள்ளியது.
இந்தப் படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். ‘டாணாக்காரன்’ வெற்றிக்குப் பின், இயக்குநர் தமிழிடம், “அடுத்து கார்த்தி சாருக்கு கதை இருந்தால் சொல்லுங்க” என்று கேட்டிருக்கிறார். தமிழ் உடனே ஒரு லைன் சொன்னதுடன், கதையும் ரெடி செய்துவிட்டார். கார்த்தியும் கதையைக் கேட்டுவிட்டு ஓகே சொல்லிவிட, இப்போது முன் தயாரிப்பு வேலைகளில் இறங்கிவிட்டார் தமிழ். இதற்கிடையே முன்னமே நடிக்க ஒப்புக்கொண்ட ‘சூர்யா 44’, ‘மனுஷி’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். கார்த்தியை இயக்கும் படத்தின் ஷூட்டிங் அநேகமாக அக்டோபர் அல்லது நவம்பரில் தொடங்கும் என்று சொல்கிறார்கள்.