இந்திய அணி 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. 2007ம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி முதல் டி20 உலக கோப்பையை வென்றது. அதன் பிறகு தற்போது 2024ல் ரோஹித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்றுள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற இந்த உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. மேலும், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் இந்த தொடருடன் ஓய்வு பெற்றுள்ளார். அவருடன் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர்.
கம்பீர் வாழ்த்து
ராகுல் ட்ராவிட்டிற்கு பிறகு கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ள நிலையில், இந்த மூன்று முன்னணி வீரர்களும் ஓய்வை அறிவித்துள்ளனர். கவுதம் கம்பீர் இந்திய அணியில் பல மாற்றங்களை செய்ய உள்ள நிலையில் மூத்த வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். இந்நிலையில், கவுதம் கம்பீர் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை வாழ்த்தி உள்ளார். இந்த உலக கோப்பை முன்பே எழுதப்பட்ட ஸ்கிரிப்டை விட சிறந்ததாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். “ரோஹித் மற்றும் கோலி இருவரும் சிறந்த வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட்டுக்காக நிறைய செய்திருக்கிறார்கள். நான் அவர்களை வாழ்த்த விரும்புகிறேன். அவர்களுக்கு எல்லா நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் இன்னும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். அவர்கள் நாட்டின் வெற்றிக்கு தொடர்ந்து பங்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்று கம்பீர் கூறியுள்ளார்.
இன்னும் கம்பீர் அதிகாரபூர்வமாக பயிற்சியாளராக அறிவிக்கப்படாத நிலையில், டி20 உலக கோப்பையில் இந்தியா வென்ற பிறகு கம்பீருக்கு இந்தியப் பயிற்சியாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி சூசகமாக கூறியுள்ளார். “கௌதம் கம்பீருக்கு நிறைய அனுபவம் உள்ளது, அவர் இந்த வேலையை எடுத்தால் அது நிச்சயமாக இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயமாக இருக்கும். அவர் அனுபவம் வாய்ந்தவர். இந்தியாவிற்கு அதுதான் தேவை. இந்திய அணி சிறப்பாக விளையாட ஒரு பயிற்சியாளர் தேவை, மேலும் அவர் எல்லா பார்மெட்டிலும் விளையாடியுள்ளார். எனவே அவரை போன்ற ஒருத்தர் அணிக்கு தேவை” என்று ரோஜர் பின்னி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக விரும்புவதாக ஒப்புக்கொண்டார். “நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறேன். இந்தியாவின் தேசிய அணிக்கு பயிற்சியளிப்பதை விட பெரிய மரியாதை எதுவும் இருக்க போவது இல்லை. ஒரு பயிற்சியாளராக நீங்கள் 140 கோடி இந்தியர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்கள்” என்று கூறி இருந்தார்.