டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்தப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது. இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை விராட் கோலியும், தொடர் நாயகன் விருதை பும்ராவும் வென்றிருக்கின்றனர்.
கடைசியாகக் கடந்த 2013-ல் இந்திய அணி ஐசிசி தொடரை வென்றிருந்த நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு ஐசிசி கோப்பையை வென்றிருக்கிறது. கிரிக்கெட் ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் எனப் பலரும் ரோஹித் சர்மா தலைமையிலான அணியைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ சார்பாக ரூ.125 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “ஐசிசி ஆண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனவே உலகக் கோப்பை 2024-ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தச் சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
டி20 உலகக் கோப்பை நடத்தும் ஐசிசி, கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 20.42 கோடியும், தென்னாப்பிரிக்காவிற்கு 10.67 கோடியும் வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.