`ஆடின 11 பேரும் டான்தான்!' – 7 ஆட்டநாயகர்கள், வீரர்களின் தொடர் பங்களிப்பு; இந்தியா சாம்பியனான கதை!

4023 நாள்களுக்குப் பின் ஒரு ஐசிசி கோப்பையை இந்திய அணி வென்றிருக்கிறது. அதிலும் நாக் அவுட் சுற்று வரை வேண்டுமெனில் முன்னேறலாம், கோப்பையை வெல்லுவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை எனப் பலராலும் அனுமானிக்கப்பட்ட ஓர் அணியை ரோஹித்தின் கேப்டன்சி சாம்பியன் ஆக்கிக் காட்டியிருக்கிறது. கிட்டத்தட்ட ஓராண்டுக்குள் அடுத்தடுத்து இரு ஐசிசி இறுதிப் போட்டிகள் தந்த ஏமாற்றங்களின் எல்லைக்குள் சுருங்கிப் போகாமல் அந்த செட்பேக்கை இந்த கம்பேக்கின் முன்னோட்டமாக மாற்றிக் காட்டிச் சாதித்துள்ளது இந்திய அணி. அதிலும் தோல்வியின் சுவடே அறியாத ஒரு மகாவெற்றி.

எப்படிச் சாத்தியமானது இது? வெற்றிக்கான அச்சாரங்கள் என்னென்ன?

இந்திய அணி

வெற்றிக்குப் பின் ரோஹித், ‘இன்றல்ல, இது பல ஆண்டுகளாக எடுத்த முயற்சியின் பலன்’ என்று குறிப்பிட்டிருந்தார். உண்மைதான். அதிலும், கடந்த டி20 உலகக்கோப்பை தந்த வலியின் எதிரொலிதான் இந்திய அணியின் நகர்வுகளில் தொடர்ந்து பிரதிபலித்துக் கொண்டே இருந்தது. மோசமான பவர்பிளே, டாப் ஆர்டரின் குறைந்த ஸ்ட்ரைக்ரேட் இவை எல்லாம் சேர்ந்துதான் தோல்விக்கான காரணமாகின என்பதால் அஞ்சாமல் அடித்து நொறுக்கும் மோடில்தான் ரோஹித் தொடர்ச்சியாகவே ஆடிக்கொண்டிருந்தார். சமீபத்திய ஐபிஎல்லைக்கூட இதற்கான ஒத்திகை என்ற எண்ணத்தோடே ரோஹித் அணுகியிருந்தார்.

கடந்த 16 ஆண்டுகளில் ஒருமுறை கூட 150-ஐ எட்டாத அவரது ஐபிஎல் ஸ்ட்ரைக்ரேட் அதை அடைந்ததுகூட இதனால்தான். 2023 சீசனில் சிஎஸ்கே வெல்வதற்குக் காரணமான ‘குட்டி குட்டி கேமியோக்களால் ஒரு நல்ல ஸ்கோரை எட்டுவது’ என்னும் வழிநின்றுதான் அவர் மட்டுமல்ல இந்திய அணியும் இத்தொடரை அணுகியிருந்தது.

ஜெய்ஸ்வால் போன்ற ஓர் அதிரடி ஓப்பனர் இருக்கையில் கோலி ஓப்பனராகக் களமிறங்குவது பல பேரால் விமர்சிக்கப்பட்டது. கோலியின் ஸ்லோ ஸ்டார்ட் அணிக்குப் பின்னடைவாகலாம் என்பது பலரது எண்ணம். ஆனால் ரோஹித் அண்ட் கோ மிகத் தெளிவாக இருந்தது. கோலியிடம் அவர்கள் எதிர்பார்த்தது அதிரடி ஆட்டத்தை அல்ல. ஒருநாள் உலகக் கோப்பையில் இருந்த அதே எதிர்பார்ப்புதான். ஆங்கரிங் ரோலையும் நெடுநீண்ட நேரம் நிலைத்து ஆடுவதையும் கோலி பார்த்துக் கொண்டால், மறுமுனையில் பண்ட் அதிரடியாக ஆடவும், ஷிவம் துபே ஸ்பின்னர்களை வேட்டையாடுவதற்கும் சுதந்திரம் கிடைக்கும் என்பதுதான்.

கோலி

ஆனால் இந்த பார்முலா நினைத்த அளவு கைகொடுக்கவில்லை. பாகிஸ்தான், பங்களாதேஷுக்கு எதிரான போட்டிகளில் பண்ட் அசத்தினார். ஆனால் கோலி நிலைத்து நின்று ஆடுவது மட்டும் நடந்தேறாது சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இறுதிப்போட்டியில் அது எல்லாவற்றுக்கும் சேர்த்து ஈடுகட்டி விட்டார். ஷிவம் துபே விஷயத்தில் மட்டுமே எதிர்பார்த்தது நடந்தேறவில்லை. ஆனாலும்கூட இந்தியா இந்த விஷயத்திலும் சாமர்த்தியமாகவே செயல்பட்டது. பிளேயிங் லெவனில் மாற்றங்களைக் கொண்டு வந்து சொதப்பாமல் சிஎஸ்கே, மும்பை மாடல் போல் அதே வீரர்களோடே பெரும்பாலும் தொடர் முழுவதும் பயணித்திருந்தனர். இதுவும் அணிக்குள்ளான ஒருங்கிணைப்புக்குப் பாலம் இட்டு சாதகமாகியது.

பௌலர்களை ரோஹித் பயன்படுத்திய விதமும் அற்புதம்தான். அணித்தேர்வு முடிந்த பிறகு அதைக் குற்றம் சொல்லாத ஆட்களே பெரும்பாலும் இல்லை. ஏன் இத்தனை ஸ்பின்னர்கள், அதிலும் ஒரே வகையிலான ஸ்பின்னர்கள், மோசமான வேகப்பந்து வீச்சு யூனிட் காலை வாரி விடாதா எனப் பல கேள்விகள். ஆனால் ரோஹித் இந்த விஷயத்தில் மிகவும் வீம்பாக இருந்தார், இந்த அணிதான் வேண்டும் என்று அடம்பிடித்துதான் அழைத்துச் சென்றார்.

ரோஹித்

அமெரிக்காவில் நடந்த போட்டிகளில் இரு ஸ்பின்னர்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் என இருந்த விகிதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு வந்ததும் 3:2 என மாறியது. களத்திற்கு ஏற்றாற் போல் அவர்களை மாற்றி மாற்றிப் பயன்படுத்தினார். இறுதிப் போட்டியில் கடைசி மூன்று ஓவர்களில் சரியான வரிசையில் பும்ரா, அர்ஸ்தீப் மற்றும் பாண்டியாவை ரோஹித் பயன்படுத்தியிருந்தார். இது மாறியிருந்தால் ஒருவேளை கோப்பை கைமாறி இருக்கலாம். இது ஓர் உதாரணம்தான். இப்படிப் பல இடங்களில் ரோஹித்தின் கேப்டன்சி சபாஷ் சொல்ல வைத்தது.

அக்ஸர்/ஜடேஜாவின் இருப்பு பேட்டிங் நீளத்தை அதிகரித்ததால் டாப் மற்றும் மிடில் அச்சமின்றி தாக்கியது. நாக்அவுட்டுக்கு முந்தைய சுற்றுகளில் கடந்த ஐந்து டி20 உலகக்கோப்பைகளில் இந்தியா எந்தளவு பந்துகளை அட்டாக் செய்துள்ளது என்று பார்த்தால் இம்முறைதான் அது 66.2% என அதிகளவில் இருக்கிறது. டி20-க்குத் தேவையான அந்த அடிநாதத்தைப் புரிந்து கொண்டு விக்கெட்டுகள் விழுந்தாலும் அதே அதிரடி ரிதத்தோடே தொடர முயன்றதுதான் சரியான முறையில் பயனளித்தது.

ஜடேஜா

2022 டி20 உலகக்கோப்பையில் 94 ஆக இருந்த ரோஹித்தின் பவர்பிளே ஸ்ட்ரைக்ரேட் இந்த உலகக்கோப்பையில் 147 ஆக எகிறியது. இதுதான் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. `மன்னன் வழி மக்கள்’ என்பது போல் மற்ற வீரர்களும் இதையே பின்பற்றினர். சூப்பர் 8 சுற்றுகளில் இந்தியாவை விட அதிகமான பந்துகளை அட்டாக் செய்திருந்தது இங்கிலாந்து (70.2%) மட்டுமே. அதுவும் பேட்டிங்கிற்கு ஆதரவளிக்காத களங்களில் இதனை இந்தியா செய்து காட்டியது.

கடந்த உலகக்கோப்பையில் பாண்டியா இல்லாததும் ஒரு பின்னடைவுதான். இந்தாண்டு பௌலிங்கில் வாய்ப்பு தரப்பட்ட போதெல்லாம் அவர் தாக்கத்தை உண்டாக்கினார். அவரது பவுன்சர்களும், ஸ்லோ பால்களும் நிரம்பவே உதவின. பேட்டிங்கிலோ அவரது சின்ன சின்ன கேமியோக்களும் கைகொடுத்தன. இது டாப் ஆர்டரை அழுத்தமின்றி ஆடவைத்தது. இதன் வாயிலாக எந்தப் புள்ளியிலும் இந்தியா டி20 ஃபார்மட்டின் பரம எதிரியான டிஃபென்சிவ் மோடுக்குள் நகரவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

ஹர்திக் பாண்டியா

இதில் சுவாரஸ்யமான இன்னொரு விஷயமும் உண்டு. இந்திய அணியிடம் மற்றதெல்லாம் சரிதான், வேகப்பந்து வீச்சுதான் பலவீனமாக உள்ளது என்றே பலரும் தொடர் தொடங்குவதற்கு முன்பு நினைத்தனர். வேகப்பந்து வீச்சில் பும்ராவை மட்டுமே நம்பிக் களமிறங்குகிறோம் என்ற கவலைth தொற்றிக்கொண்டது. ஆனால் அர்ஷ்தீப் மற்றும் பாண்டியா இருவருமே அவருக்கு பளூ ஏற்றாமல் பக்கபலமாகவே நிற்க, இந்தியாவின் பயணம் சுலபமானது. 43 விக்கெட்டுகளை இந்த மூவரணி எடுத்திருந்தது. 19 விக்கெட்டுக்களை குல்தீப் + அக்ஸர் வீழ்த்தியிருந்தனர். குல்தீப் அவ்வப்போது பிரேக் த்ரூ கொடுத்தார் என்றால் அக்ஸர் எக்ஸ் ஃபேக்டராகவே உருவெடுத்தார். காயம் காரணமாக ஐசிசி தொடர்களில் ஆடமுடியாமல் போன பழைய வலிகளுக்கான ஆறுதலை இங்கே தேடிக் கொண்டார்.

இது எல்லாவற்றையும்விட இந்தியா வென்றதற்கான மிக முக்கியக் காரணம், ஒருவரது தோளில் மட்டும் அணி பிரயாணிக்கவில்லை. தொடர் முழுவதும் ரோஹித் தனது முழு பராக்கிரமத்தையும் வெளிப்படுத்தினார், எட்டு போட்டிகளில் 257 ரன்களைக் குவித்தார், 157 என்னும் அவரது ஸ்ட்ரைக்ரேட் அணிக்குக் கைகொடுத்தது, பௌலிங்கில் 4.5 எக்கானமியோடு வீசிய பந்துகளில் 61.8 சதவிகிதம் டாட் பால்களை வீசி பும்ரா ஆதிக்கம் செலுத்தினார். ரோஹித் சொன்னதைப் போல் அவர் என்ன செய்கிறார் என்பது புரிகிறது, அதை எப்படி நிகழ்த்துகிறார் என்பதுதான் புரியவில்லை என்பதுதான் பும்ராவின் அசாத்தியத்துக்கான அளவீடு. ஆக, இந்த இருவரது தாக்கமும் அதிகளவில் இருந்தன. இருப்பினும் இந்த இருவரைத் தாண்டி பலரும் ஒவ்வொரு கட்டத்திலும் தனது கடமையைச் சரியாகச் செய்திருந்தனர்.

குல்தீப் யாதவ்

குல்தீப்பின் ஸ்பெல்கள் மேட்ச் வின்னிங் ஸ்பெல்களாக மாறின, பாண்டியா ஆல்ரவுண்டராகச் சோபித்தார், கிளாசனின் அந்த விக்கெட்தான் சகலத்தையும் மாற்றியது. போன உலகக்கோப்பையில் பல எதிர்மறை விமர்சனங்களைச் சந்திக்க நேர்ந்த சூர்யகுமாரை அவர் பிடித்த மில்லரின் கேட்ச் 1983-ல் கபில் தேவ் பிடித்த கேட்சோடு ஒப்பிடப்படுமளவு உயர்த்தி விட்டது. முன்கூட்டி இறக்கி விடப்பட்டும் அந்தச் சூழலின் அழுத்தத்தை கையாண்டு கோலியுடன் அக்ஸர் கொண்டு வந்த பார்ட்னர்ஷிப் ரன்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. இப்படி எல்லோருடைய பங்களிப்பாலும்தான் கோப்பை சாத்தியமானது. ஏழு வெவ்வேறு ஆட்ட நாயகர்களை இந்தத் தொடர் பார்த்திருந்தது என்பதுவே இதற்கான மெய்யான சாட்சி‌. சக்கரம் சுழல்வதற்கு வேண்டுமானால் ஒற்றை அச்சாணி போதுமானது. ஆனால் ஒட்டுமொத்த வண்டியும் முன்னேற சகலமும் சரியாக இயங்க வேண்டும். இந்திய அணிக்கு இத்தொடரில் நடந்தது அதுதான்!

கடந்தாண்டு அணி தொடர்ந்து ஐசிசி தொடர்களில் தோல்விகளையே சந்திப்பது பற்றி ஒருமுறை விமர்சனம் வந்த போது ரோஹித், “வெளியில் உள்ளவர்கள் போகிற போக்கில் கருத்துகளை வேண்டுமெனில் அள்ளித் தெளிக்கலாம், உள்ளே என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும்” என்று கூறி இருந்தார். ‘Trust The Process’ என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. ஆண்டுக்கணக்கில் அணிக்குள் செய்த சின்ன சின்ன மாற்றங்களும் சீரமைப்புகளும் ஒன்றாகக் கைகூடி அணிக்கு கோப்பையை வென்று தந்திருக்கிறது டீமுக்குள்ளான ஒருங்கிணைப்பின் வாயிலாக.

ராகுல் டிராவிட்

வழக்கத்திற்கு மாறாக டிராவிட் பெருமளவில் துள்ளிக் குதிக்க, இந்திய வீரர்கள் சாம்பியனாக மகுடம் சூடும்படியான அந்தக் கடைசி பந்து வீசப்பட்ட பின், ரோஹித், கோலி, பும்ரா, பாண்டியா உள்ளிட்டோரிடம் வழக்கம் போல ஆர்ப்பாட்டமோ ஆக்ரோஷ வெளிப்பாடோ இல்லை. மிகப்பெரிய கொண்டாட்டங்கள் கூட இல்லை. மாறாக அத்தனை பேரின் கண்களும் ஒருசேர வேர்த்ததைப் பார்க்க முடிந்தது. அந்தத் தருணம், வருடக்கணக்கான வலி, ஏக்கம் எல்லாம் தீர்ந்த ஆத்ம சந்தோஷத்தையும் உணரமுடிந்தது. மில்லியன் கணக்கிலான ரசிகர்கள் அத்தனை பேருக்குள்ளும் அந்த நொடியில் அவை ஒட்டுமொத்தத்தையும் கடத்திவிட்டனர் என்பதே உண்மை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.