கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்மமாக உயிரிழந்த நிலையில், ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வுக் குழு இன்று (ஜூலை 1) மாணவியின் தாய் செல்வியிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2022 ஜூலை 13-ம் தேதி மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி மர்ம மரணத்தைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது தாயார் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், 2022 ஜூலை 17-ம் தேதி பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டு, பள்ளிக்குச் சொந்தமான உடைமைகள் சூறையாடப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆட்சியர், எஸ்பி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு மாணவி மர்ம மரணம் மற்றும் கலவரம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸாரும், கலவர வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்க கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த வழக்கை வேறு புலனாய்வு குழுவுக்கு மாற்ற வேண்டுமென பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, ஆஜரான சிறப்பு புலனாய்வுக் குழு, கலவரம் தொடர்பாக 519 கைது செய்யப்பட்டு, 150-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கலவரம் தொடர்பாக மாணவியின் தாய் மற்றும் விசிக பிரமுகர் திராவிட மணி ஆகியோரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் ஆகியும், அவர்களிடம் ஏன் இதுவரை விசாரணை நடத்தவில்லை? என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விசிக பிரமுகர் திராவிட மணியிடம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய நிலையில், இன்று (ஜூலை 1) மாணவியின் தாய் செல்வி வசிக்க்கும், கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில், சிறப்பு புலனாய்வுக் குழு 2 மணி நேரம் விசாரணை நடத்திவிட்டுச் சென்றனர்.