விழுப்புரம்: “பாமக வெற்றி பெற்றால் அடுத்த மாதமே 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் உத்தரவிடுவார். முதல்வருக்கு நம்மை கண்டு பயம் வரவேண்டும். இத்தேர்தலில் மனசாட்சியோடு நடந்து கொள்ளாதீர்கள். பணம் வாங்கிவிட்டோமே, என்று பிரித்து வாக்களிக்காதீர்கள். திமுகவுக்கு ஒரு வாக்குக்கூட விழக் கூடாது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சாணிமேடு கிராமத்தில் இன்று (ஜூலை 10) பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: “நம் உரிமைகளுக்காக நடைபெறும் தேர்தல். இத்தேர்தலில் திமுக பணத்தை மட்டுமே நம்பியுள்ளது. இட ஒதுக்கீட்டுக்காக மருத்துவர் ராமதாஸ் 45 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார். எங்கிருந்தோ வந்த அமைச்சர் பணம் கொடுத்து இக்கூட்டத்துக்கு வரவிடாமல் தடுக்க முயற்சித்தார்கள்.
ஆனால், நாம் பணத்துக்கு மயங்குபவர்களா? இத்தேர்தலில் பாமக வெற்றி பெற்றால் அடுத்த மாதமே 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும். மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடுவார். முதல்வருக்கு நம்மை கண்டு பயம் வரவேண்டும். இத்தேர்தலில் மனசாட்சியோடு நடந்து கொள்ளாதீர்கள். பணம் வாங்கிவிட்டோமே, என்று பிரித்து வாக்களிக்காதீர்கள். ஒரு வாக்குக்கூட திமுகவுக்கு விழக்கூடாது. அதிமுகவினருக்கு ஒரு வேண்டுகோள். நம் பொது எதிரி திமுக. நீங்கள் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும்,” என்று பேசினார்.
பாமக திமுக இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு: விக்கிரவாண்டி அருகேயுள்ள சாணிமேடு, கடையம் கிராமங்களில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள நிலையில், திமுகவினர் பணம் கொடுத்து திமுக கட்சி அலுவலகத்தில் பொதுமக்களை அடைத்து வைத்துள்ளதாக கூறி, பாமகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ள முயற்சித்ததால் அங்கு, தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து காணை போலீஸார் இருதரப்பினரிடமும், சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூட்டத்தை அங்கிருந்து கலைத்தனர்.