உத்திரப்பிரதேசத்தின் நொய்டா பகுதியைச் சேர்ந்தவர் நீலேஷ்வர் பாண்டே (22). இவர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது யூடியூப் பக்கத்தை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் பின் தொடர்கின்றனர். தனது சேனலில் அதிகமான சப்ஸ்கிரைபர்களை ஈர்க்கவும், பர்வையாளர்களை அதிகரிக்கவும் விரும்பிய நீலேஷ்வர், நொய்டாவின் பழைய ஹைபத்பூர் பகுதியில் உள்ள 30 அடி உயர செல்போன் டவரில் ஏறி சாகச முயற்சியை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.
அதற்காக நேற்று தனது நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு, டவர் அமைந்துள்ள பகுதிக்கு சென்ற நிலேஷ்வர், தான் டவரில் ஏறுவதை வீடியோவாக பதிவு செய்யவும், லைவ் ஸ்ட்ரீமிங் செய்யவும் அறிவுறுத்தி ஏற துவங்கியிருக்கிறார். நீலேஷ்வர் செல்போன் டவரில் ஏறுவதை பார்த்த அப்பகுதி மக்களும், ‘டவர் பணியாளர்கள் யாரேனும் அதனை சரி செய்ய வந்திருப்பார்கள்’ என நினைத்திருக்கின்றனர். ஆனால் கீழே ஒருவர் அதனை வீடியோவாக பதிவு செய்வதை கண்டதும், அது குறித்து விசாரித்திருக்கின்றனர்.
அப்போதுதான் அவர் யூடியூப் பக்கத்திற்காக வீடியோ பதிவு செய்து கொண்டிருக்கும் விஷயத்தை நீலேஷ்வரின் நண்பர் தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்ட அந்தப் பகுதி மக்கள் நீலேஷ்வரை கீழே இறங்கும்படி கூறியிருக்கின்றனர். ஆனால் அவர் இறங்க முடியாது என மறுத்திருக்கிறார். உடனே அந்தப் பகுதியை சேர்ந்த சிலர் இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். உடனே சம்பவ இடத்துக்கு தீயணைப்பு துறையினருடன் வந்த காவல்துறையினர், நீலேஷ்வரை கீழே இறங்கும்படி எச்சரித்திருக்கின்றனர்.
ஆனால் மேலே ஏறிய நீலேஷ்வரால் கீழே இறங்கமுடியவில்லை. பயத்தால் கீழே இறங்க முடியாமல் திணறியிருக்கிறார். சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் அவரை பத்திரமாக மீட்டனர். அதன் பிறகு நீலேஷ்வரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, தனது தந்தை ஓமன் நாட்டில் வேலை செய்வதாகவும், ஆனால் போதிய வருமானம் இல்லாததால் குடும்பத்திற்காக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருவதாகவும், அதன் மூலம் சிறிது வருமானம் கிடைத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதனால், சப்ஸ்கிரைபரை அதிகரித்து வீவ்ஸையும் அதிகரித்தால் இன்னும் நிறைய வருமானம் கிடைக்கும் என எண்ணி இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து நீலேஷ்வர் மீது வழக்குப்பதிவு செய்ய இருப்பதாகவும், சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதைத் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் எச்சரித்திருக்கிறது காவல்துறை.