புதுடெல்லி: புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டிய நிலையில், ரயில்வே அமைச்சகம் அதனை மறுத்துள்ளது.
இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக பாரதிய நியாய சன்ஹிதா 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா 2023 ஆகிய 3 சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை இன்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
பாரதிய நியாய சன்ஹிதா 2023 சட்டப்பிரிவு 285-ன் கீழ் டெல்லி ரயில் நிலைய மேம்பாலத்தின் நடைமேடையில் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடை வைத்திருந்த வியாபாரி மீது முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக எந்தவொரு சாலையோர வியாபாரி மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என புதுடெல்லி ரயில் நிலைய போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.
இது தொடர்பான அறிக்கையை தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ரயில்வே அமைச்சகம், “சார், தயவு செய்து தவறான தகவலை பரப்பவேண்டாம்” என்று தெரிவித்துள்ளது.
Sir, pls don’t mis-inform !
Team @RailMinIndia is at nation service 24x7x 365 . https://t.co/3sYd4RKkOD pic.twitter.com/jcRH5uPNJR— Ministry of Railways (@RailMinIndia) July 1, 2024
புதிய சட்டங்களின் முக்கிய அம்சங்கள் – 1. பாரதிய நியாய சன்ஹிதா, 2023: இந்திய தண்டனைச் சட்டம் 1860-க்கு மாற்றான இந்தப் புதிய சட்டத்தில் தேசதுரோகம் என்பது நீக்கப்படுள்ளது மாறாக, பிரிவினைவாதம், கிளர்ச்சி, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக தண்டனை வழங்கும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. சிறுவர்களை கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் மற்றும் கும்பலாக அடித்து கொலை செய்வதுற்கு மரண தண்டனை வழங்க வகை செய்கிறது. முதல் முறையாக இந்த தண்டனைகளில் ஒன்றாக சமூக சேவையும் சேர்க்கப்பட்டுள்ளது.
2. பாரதிய நாகரிக் சுரக்ஷா 2023: இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்துக்கு மாற்றாக இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, கால வரையறைக்குள் விசாரணை மற்றும் வாதங்கள் நடத்தப்பட வேண்டும். விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களின் வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குற்றத்தின் வருமானம் மற்றும் சொத்துக்களை இணைக்கும் புதிய வழிமுறை இணைக்கப்பட்டுள்ளது.
3. பாரதிய சாக்ஷியா 2023: இது இந்திய சாட்சிகள் சட்டம் 1972க்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி, நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சாட்சிகளில், மின்னணு அல்லது டிஜிட்டல் ஆவணங்கள், மின்னஞ்சல்கள், சர்வர் பதிவுகள், கணினி, மடிக்கணினி, குறுஞ்செய்திகள், இணையதளங்கள், சம்பவம் நடந்த இடத்தின் சான்றுகள், அஞ்சல்கள், சாதனங்களில் உள்ள செய்திகள் ஆகியவை அடங்கும். வழக்கு ஆவணம், முதல் தகவல் அறிக்கை, குற்ரப்பத்திரிக்கை மற்றும் தீர்ப்புகள் டிஜிட்டல்மயாக்கப்பட வேண்டும். காகித ஆவணங்களைப் போலவே டிஜிட்டல் மற்றும் மின்னணு ஆவணங்களும் சட்ட அங்கீகாரம், மதிப்பு, அமலாக்கத்தன்மை பெறும்.