சென்னை: சிறுவன் உயிரிழப்புக்கு கழிவுநீர் கலந்த குடிநீர் காரணமா?! சந்தேகமும் விளக்கமும் | Spot Report

பிழைக்க வந்த பீகார் குடும்பம்

பீகாரிலிருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவன், கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததில் உடல் நலக்குறைபாடு ஏற்பாடு பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியானது. சிறுவன் உயிரிழந்த நிலையில், அவனின் சகோதரியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சிறுவனின் மரணத்துக்குக் குடிநீர் தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது என்று அரசு தரப்பு நழுவப்பார்க்கிறது. ஏற்கனவே சென்னையில் பல பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகச் சென்னை வாசிகள் குற்றச்சாட்டை முன்வைக்கும் நிலையில் என்ன நடந்தது இந்த விவகாரத்தில் என்று நேரில் சென்று விசாரித்தோம்!

சிறுவன் உயிரிழப்பு

பீகாரைப் பூர்வீகமாகக் கொண்டவர் ராஜேஷ்குமார். இவர் கடந்த பத்து நாள்களுக்கு முன்பாக வேலைதேடி சென்னை வந்திருக்கிறார். சென்னையில் சைதாப்பேட்டையில் உள்ள அபித் காலனியில் வாடகைக்கு வீடெடுத்து தனது மனைவி சுமந்தகுமாரி, இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் என ஆறு பேரும் குடிபுகுந்திருக்கிறார். ராஜேஷ்குமார் கட்டுமானப்பணி நடக்கும் இடத்தில் வேலைக்குச் சேர, அவரின் மனைவி கிண்டியில் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 26-ம் தேதி சிறுவனுக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கிறது. சிறுவனின் பெற்றோர்களும் அருகிலிருந்த மருந்துகளில் மாத்திரை வாங்கி கொடுத்திருக்கிறார்கள். இருந்தபோதிலும் மறுநாளும் சிறுவனுக்கு வயிற்றுப் போக்கு தொடர்ந்திருக்கிறது.

இதனால், சிறுவனின் பெற்றோர்கள், கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்து சிறுவனைச் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லச் சொல்லியிருக்கிறார்கள். மருத்துவமனையில் சிறுவனைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். பிழைக்க வந்த இடத்தில் மொழியில் தெரியாது என்ன நடக்கிறது என்று புரியாமல் மருத்துவமனை வாசலில் சிறுவனின் பெற்றோர்கள் கதறித் துடித்திருக்கிறார்கள்.

சிறுவனைத் தொடர்ந்து சிறுவனின் சகோதரியான மீரா என்ற ஏழு வயது சிறுமிக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. பயந்துபோன குழந்தையின் பெற்றோர்கள் உடனடியாக சிறுமியை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள். ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சையளிக்க 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் புகார் சொல்லியிருக்கிறார்கள் சிறுமியின் பெற்றோர்கள்.

சிறுவன் வீடு

சிறுவன் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது தொடர்பாக அபித் காலனியில் உள்ள மக்களிடம் சென்று பேசினோம். “சம்பவம் நடந்த அன்று சிறுவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது தாகமெடுக்க டம்பளரை எடுத்துச் சென்று வீட்டிலிருந்த மெட்ரோ வாட்டர் அடிபம்பில் தண்ணீர் அடித்துக் குடித்திருக்கிறான். அன்று முதலே சிறுவனுக்கு வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டிருக்கிறது. சிறுவனுக்கு மட்டுமல்ல அவன் குடியிருந்த வீட்டில் இன்னும் ஒரு சிலருக்கு அதே பாதிப்பு இருந்திருக்கிறது. இதேபோல இந்த பகுதியில் உள்ள பலருக்கும் வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் கடந்த சில வாரங்களாகவே குடிநீரில் கழிவுநீர் கலந்துதான் வருகிறது. இதுகுறித்து மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தொடங்கி மாநகராட்சி அதிகாரிகள் வரை பலருக்கும் புகார் சொல்லிவிட்டோம். ஒரு உயிர் போன பின்னதான் அதிகாரிகள் தொடங்கி அமைச்சர் வரை அனைவரும் நேரில் வந்து பார்க்கிறார்கள். அதுக்கு முன்ன எட்டிப்பார்க்கக் கூட ஆள் இல்லை. இவ்வளவு மோசமா வரும் தண்ணியை எப்படி நாங்க பயன்படுத்த முடியும். இப்போ இங்க விற்கும் கேன் தண்ணியும் சரியில்லைன்னு சொல்கிறார்கள். எந்த தண்ணீரைப் பயன்படுத்துவதென்றே பயமாக இருக்கிறது. மெட்ரோ தண்ணீரைப் பயன்படுத்த கூடாதுன்னு அந்த அடிபம்புக்கு பூட்டும் போட்டுவிட்டார்கள்”என்றார்கள் விரக்தியாக.

உண்மையில் நாம் சென்று பார்க்கும்போது அவர்கள் காட்டிய தண்ணீர் மிகவும் கலங்கிய நிலையில் துர்நாற்றம் வீசியது. வேறு வழியில்லாது அந்த தண்ணீரைத்தான் பயன்படுத்தி வருவதாகவும் சொல்கிறார்கள் பகுதி வாசிகள். சிறுவனின் உயிரிழப்புக்குப் பிறகு அந்த பகுதி முழுமைக்கும் பிளீச்சிங் பவுடர் தெளித்து, மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த முகாமுக்கும் பரிசோதனை செய்ய மக்கள் வந்துகொண்டுதான் இருந்தார்கள். அதேபோல, கடந்த 30-ம் தேதி அந்த பகுதியில் ஆய்வு செய்ய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்றிருந்தார். அப்போது அந்த பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்கும்போது அந்தப்பகுதி வாசிகளும், “தண்ணீர் மோசமாக வருகிறது. புகார் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்று அமைச்சரிடம் குறைகளைக் கொட்டித் தீர்த்தனர்.

பரிசோதனை முகாம்

அமைச்சரும் அங்குள்ள அதிகாரிகளை அழைத்து நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லிச்சென்றார். அமைச்சரும் வந்து சென்றுவிட்டார், இன்னும் அந்த பகுதியில் உள்ள குடிநீர் இணைப்புகளைச் சரி செய்வதாகச் சொல்லி பள்ளம் தோண்டி பணிகளைச் செய்துகொண்டிருக்கிறது குடிநீர் வாரியம். `கடந்த ஒரு மாதத்தில் தமிழகம் முழுவதும் சுகாதாரமற்ற குடிநீரால் பத்து உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் வழங்குவதைக் கூட இந்த அரசால் உறுதிசெய்ய முடியவில்லை’ என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறுவனின் மரணம் குறித்து கண்டனங்களைப் பதிவு செய்திருந்தார்.

சிறுவன் உயிரிழப்புக்குக் காரணம் என்ன என்பது குறித்து சென்னை உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதிஷ்குமாரிடம் பேசினோம். “சிறுவன் வீட்டிலிருந்த குடிநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் வேதியியல் முடிவுகளில் எந்த பிரச்னையும் இல்லை என்றுதான் முடிவுகள் வந்திருக்கின்றன. அதேபோல, அந்த பகுதியில் விற்பனை செய்யும் கேன் குடிநீரில் ஒருசில வேதிப்பொருள்கள் அதிகமாக இருப்பதும் தெரியவந்திருக்கிறது.

சதீஷ்குமார்

அந்த நிறுவனம் குறித்தும் விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவை அனைத்துமே உயிரைப் பறிக்குமளவுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவையல்ல. அதேபோல, சிறுவன் அவன் தந்தை பணியாற்றும் இடத்தில் ஏதோ உணவு சாப்பிட்டதாகச் சொல்கிறார்கள். அதனையும் ஆய்வு செய்யவேண்டும். ஆய்வு முடிவுகள் அனைத்தும் வராத நிலையில் சிறுவனின் இறப்பு என்ன காரணம் என்பதைச் சொல்லிவிட முடியாது” என்றார் சுருக்கமாக.

`உண்மை காரணத்தை வெளிப்படையாகச் தெரிவிப்போம்!’

இந்த விவகாரம் குறித்து சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். “அபித் காலனி பகுதியில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். சிறுவனின் மரணம் குறித்துத் தெரிந்ததுமே அந்த பகுதிக்கு அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது அந்த பகுதி மக்கள் குடிநீரில் கழிவுநீர் தொடர்பாக என்னிடம் புகார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து உடனடியாக சரிசெய்யச் சொல்லியிருக்கிறேன். சிறுவனின் மரணத்துக்குப் பெருநகர் குடிநீர்தான் காரணம் என்று சொல்லிவிட முடியாது. அந்த சிறுவன் அதற்கு முன்பாக அவனின் தந்தை வேலைபார்க்கும் இடத்தில் உணவு சாப்பிட்டதாக அவரின் தந்தையே சொல்கிறார். தண்ணீர்தான் பிரச்னை என்றால், அந்த பகுதியில் ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள் அவர்களுக்கும் ஏதாவது ஆகியிருக்கும். முதற்கட்ட பரிசோதனை முடிவில் நீர் காரணம் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல, பிரேதப்பரிசோதனை முடிவுகள் இன்னும் ஓரிரு நாளில் வந்துவிடும். சிறுவனின் இறப்புக்கு நீரா அல்லது உணவா என்ன காரணம் என்பது தெரிந்துவிடும்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சிறுவன் உயிரிழப்பு விவகாரத்தில் உண்மை தெரியாமல் எதிர்க்கட்சி தலைவர் அரசியல் செய்வது அபத்தமானது. சிறுவனின் சிறுமி எழும்பூர் மருத்துவமனையில் சேரும்போது பணம் கேட்டது உண்மைதான். வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது கட்டணம் மற்றும் பரிசோதனைகளுக்குக் கட்டணம் செலுத்தச் சொல்லும் நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது. இந்தியா முழுவதுமே இந்த நடைமுறை இருக்கிறது. இந்த விவகாரம் தெரியாமல் லஞ்சம் வாங்குகிறார்கள் என்று சொல்வது முற்றிலும் தவறானது. சிறுமிக்குச் சிறப்பான சிகிச்சை வழங்கப்படுகிறது. தற்போது சிறுமி நலமுடன் இருக்கிறார். முதல்வரிடம் பேசி அரசு மருத்துவமனைகளில் வெளிமாநிலத்தவருக்கான கட்டணத்தைக் குறைக்கவும் முயற்சிகள் நடைபெற்றுவருகிறது. உண்மையில் இந்த விவகாரத்தில் யாராவது தவறு செய்திருந்தால் அது எதுவும் மறைக்காமல் மக்கள் மன்றத்தில் தெரிவிப்போம்” என்றார் உறுதியாக.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.