‘தினமும் மல்டி வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்வதால் எந்த பயனும் இல்லை’ என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், வயதானவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வாரத்திற்கு ஒரு முறை அல்லது அதற்கு மேல் மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக் கொள்கின்றனர். ‘இந்த மாத்திரை நீண்ட நாள்கள் வாழ உதவும்’ என்று அவர்கள் நம்புவதுதான் இதற்கு முக்கியக் காரணம். மேலும், உலக அளவில் சந்தை மதிப்பிலும் மல்டி வைட்டமின் மாத்திரைகளின் விற்பனை வளர்ச்சி அடைந்து வருகிறது.
சமீபத்தில், அமெரிக்க ஆய்வாளர்கள் மல்டி வைட்டமின் மாத்திரைகள் குறித்து ஆய்வு ஒன்று மேற்கொண்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு மேல் மல்டி வைட்டமின் மாத்திரைகளை உட்கொண்டு வருபவர்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், மல்டி வைட்டமின் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாதவர்களை விட, எடுத்துக்கொண்டவர்களின் ஆயுட்காலம் குறைவாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஆக, தினமும் மல்டி வைட்டமின் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா… கூடாதா?’ என பொதுநல மருத்துவ நிபுணர் டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லாவிடம் கேட்டோம்.
“பொதுவாகவே, எந்தவொரு சத்து மாத்திரையும் ஆயுள் காலத்தை நேரடியாக நீட்டிக்காது. ஒருவரின் ஆயுட்காலம் என்பது அவரின் உணவு, பழக்க வழக்கங்கள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணிகளை பொறுத்துத்தான் அமைகிறது.
மல்டி வைட்டமின் மாத்திரைகள் உடலில் உள்ள வைட்டமின் பற்றாக்குறையை சீர் செய்வதற்குத்தான் பரிந்துரைக்கப்படுகிறதே தவிர, ஆயுள் காலத்தை நீட்டிக்க அல்ல. அதனால், இவை ஆயுள் காலத்தை நீட்டிக்கும் என்று நினைப்பதெல்லாம் முற்றிலும் தவறு. மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான மக்கள் மல்டி வைட்டமின் மாத்திரை ஆயுட்காலத்தை நீட்டிக்கும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து உட்கொண்டு வருகிறார்கள். அந்த எண்ணம் தவறு என்று இந்த ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது.
பெரும்பாலான மக்கள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே சப்ளிமென்ட் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகின்றனர். அது அவசியமற்றது. மல்டி வைட்டமின் மாத்திரை ஒருவருக்கு உடலில் ஏதேனும் வைட்டமின் குறைபாடு இருந்தால், அதை பொறுத்து பரிந்துரைக்கப்படும் மாத்திரை.
வைட்டமின் குறைபாடுகளை சரிசெய்ய, பலருக்கும் உணவு பழக்கத்தை மாற்றினாலே போதுமானது. அது முடியாதபட்சத்தில் வைட்டமின் மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
வைட்டமின் மாத்திரை தொடங்கி பாராசிட்டமால் வரை, எந்த மாத்திரையயும் மருத்துவரின் பரிந்துரையில் பேரில் உட்கொள்வதே நல்லது” என்று கூறுகிறார் டாக்டர்.