Guruvayoor Ambalanadayil: "`அழகிய லைலா' பாட்டுக்காக என் பேரை தேங்ஸ் கார்டுலயாவது…"- சிற்பி ஆதங்கம்

‘உள்ளத்தை அள்ளித்தா’ பட ‘அழகிய லைலா…’ பாடல் மீண்டும் வைரலாகி, 90ஸ் கிட்ஸ் மட்டுமல்ல 2கே கிட்ஸின் உள்ளத்தையும் அள்ள ஆரம்பித்திருக்கிறது. காரணம், மலையாளத்தில் பிரித்விராஜ் நடித்திருக்கும் ‘குருவாயூர் அம்பலநடையில்’ படம்தான்.

சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக், ரம்பா நடிப்பில், காமெடியில் கதகளி ஆடி மெகா ஹிட் அடித்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் பழநிபாரதியின் துள்ளலான வரிகளில் கலர்ஃபுல்லான ‘அழகிய லைலா…’ பாடல் இடம்பெற்றிருந்தது. இந்தப் பாடல் தற்போது ‘குருவாயூர் அம்பலநடையில்’ என்ற மலையாளப் படத்திலும் இடம்பெற்று செம்ம வைப் செய்ய வைத்திருக்கிறது. இந்த வைப்பிற்குக் காரணமான ‘உள்ளத்தை அள்ளித்தா’ இசையமைப்பாளர் சிற்பியிடம் பேசினோம்.

இசையமைப்பாளர் சிற்பி

“’அழகிய லைலா’ பாடல் இத்தனை வருடங்களுக்கு அப்புறமும் பெரிசா கொண்டாடப்படுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ’குருவாயூர் அம்பலநடையில்’ படத்தைப் பார்த்துட்டு நிறைய பேர் எனக்கு போன் பண்ணி சந்தோஷப்பாட்டாங்க. சிற்பியை இன்னும் மக்கள் மறக்கலங்கிறதைத்தான் இது காட்டுது. இந்தப் பாட்டுக்காக சுந்தர்.சி என்கிட்ட வரும்போது ’ரம்பாவோட இன்ட்ரொடக்‌ஷன் பாட்டு இது. ரொம்ப மாஸ்-ஆ அரபு ஸ்டைலில் வேணும்னு சொல்லி சில பாடல்களோட ரெஃப்ரென்ஸ் எல்லாம் கொடுத்தார். அதுக்கேற்றமாதிரி, நான் மியூசிக் பண்ணினேன். இந்தப் பாடல் ஹிட் ஆனதற்கு டீம் ஒர்க்தான் காரணம்னு சொல்லணும்.

பழநிபாரதி காட்சிகளோட சூழலுக்கு ஏற்ப ரொம்ப அற்புதமா பாடல் வரிகளை எழுதினார். பிருந்தா மாஸ்டரோட நடன அமைப்பு இந்தப் பாட்டுக்கு பெரிய ப்ளஸ். வி.கே. செந்தில்குமாரோட ஒளிப்பதிவும் பாராட்டுக்குரியது. மிக முக்கியமா பாடகர் மனோ சார் புதுசா வித்தியாசமான மாடுலேஷனில் பாடினார். இந்தப் படத்துல வர்ற அத்தனை பாடல்களையும் அப்படித்தான் பாடினார். சில பாடகர்கள் ஹை-பிட்ச்ல பாடும்போது சிரமப்படுவாங்க. ஆனா, ’உள்ளத்தை அள்ளித்தா’ படத்துல வந்த எல்லா பாட்டுமே ஹை-பிட்ச்ல வர்ற பாடல்கள்தான். ஆனா, அத்தனை பாடல்களையும் ஒரு வாரம் இதுக்காகவே ஒதுக்கி வெச்சுட்டு வந்து மனோ சார் பாடினார். இந்த நேரத்துல அவருக்கு ஒரு சல்யூட்! வாய்ஸ் மாடுலேஷன் எல்லாமே புதுசா பண்ணியிருப்பார். இந்தப் படத்தோட எல்லா பாடல்களையும் பழநிபாரதி எழுதின மாதிரி எல்லா பாடல்களையும் மனோ சார்தான் பாடினார்.

இசையமைப்பாளர் சிற்பியுயுடன் மனோ

‘உள்ளத்தை அள்ளித்தா’ பொங்கல் டைம்ல ரிலீஸாகி தியேட்டர்களில் 250 நாள்கள் ஓடிச்சு. இவ்ளோ பெரிய சக்சஸ் ஆகும்னு நினைச்சுப்பார்க்கல. நானும் அந்தப் படத்துல ஒரு பகுதியா இருக்கேங்கிறதுல ரொம்ப பெருமை. கார்த்திக் சார் தினமும் கம்போஸ் நடக்கும்போது வந்துடுவார். ’அழகிய லைலா’ பாட்டுக்கு கார்த்திக் சார் ரொம்பவே பாராட்டினார்.

’உள்ளத்தை அள்ளித்தா’ படம் ரிலீஸுக்குப் பிறகுதான் தெலுங்கு, தமிழ்னு பெரிய படங்களின் வாய்ப்புகள் வந்துச்சு. வணிகரீதியான சக்சஸ் கொடுக்கிற இசையமைப்பாளர்ங்கிற அங்கீகாரமும் எனக்கு கிடைச்சது. நிறைய இயக்குநர்கள் ‘அழகிய லைலா’ பாட்டு மாதிரியே வேணும்னு கேட்டாங்க. இந்தப் படத்தோட 235வது நாள் வெற்றி விழாவுக்காக கோவை போனோம். காவேரி காம்ப்ளக்ஸ்லதான் படம் ஓடிக்கிட்டிருந்துச்சு. திருப்பூர் சுப்பிரமணியம் விழாவை நடத்தினார்.

உள்ளத்தை அள்ளித்தா

அப்போ நானும் சுந்தர்.சி யும் போனப்போ ரசிகர்கள் எங்களைத் தூக்கி வெச்சு கொண்டாடினாங்க. அதையெல்லாம் மறக்கவே முடியாது. மிக முக்கியமா கவுண்டமனி சாருக்கு ’மேட்டுக்குடி’ படத்துல ‘வெல்வெட்டா வெல்வெட்டா…’ பாட்டுலயும், ’உள்ளத்தை அள்ளித்தா’ படத்துல ‘அழகிய லைலா’ பாட்டுலயும் டூயட் ஆடியிருப்பார். அவர் ஹீரோயின் கூட டூயட் ஆடினது என்னோட பாடல்களில்தான். கவுண்டமனி சார் அடிக்கடி எனக்கு ஃபோன் பண்ணி, எனக்குன்னு ஒரு டூயட் பாட்டு போட்டிருக்கியேப்பா ரொம்ப சந்தோஷம் என்பார்” என்று நெகிழ்பவரிடம், ”குருவாயூர் அம்பலநடையில் படம் பார்த்தீர்களா? படக்குழுவினர் உங்களிடம் பேசினார்களா?” என்று கேட்டபோது,

“நான் இன்னும் படம் பார்க்கல. நண்பர்கள் மூலமாத்தான் கேள்விப்பட்டேன். இதுவரைக்கும் படக்குழுவினர் யாரும் என்கிட்ட பேசல. என் பேருக்கு கிரெடிட் போட்டாங்களான்னும் தெரியாது. ’அழகிய லைலா’ பாடலின் உரிமை யாரிடம் இருக்கோ அவங்களுக்குத்தான் சொந்தம். ’உள்ளத்தை அள்ளித்தா’ உரிமையைத் தயாரிப்பாளரிடமிருந்து ’லஹரி’ மியூசிக் வாங்கியிருக்காங்க. அவங்களுக்குத்தான் உரிமை இருக்கு. அவங்கதான் பர்மிஷன் கொடுக்கணும். என்கிட்ட பர்மிஷன் வாங்கணும்னு அவசியம் கிடையாது. அதுல எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது.

Guruvayoor Ambalanadayil

நான் லஹரி மியூசிக் நிறுவனத்துக்கு போன் பண்ணிக் கேட்டேன். அவங்க முறையா அனுமதி வாங்கித்தான் பயன்படுத்தியிருக்காங்கன்னு சொன்னாங்க. ஆனா, அந்தப் பாடலின் இசையமைப்பாளர் என்கிற முறையில் என் பெயரை கிரெடிட்ல போடணும். அதுதான் என்னோட விருப்பம். நான் பணமெல்லாம் எதிர்பார்க்கல. தேங்க்ஸ் கார்டுலயாவது என் பெயரைப் போட்டிருக்கணும். அதுவும் போட்டாங்களான்னு எனக்குத் தெரியல. ஏன்னா, நான் இன்னும் படம் பார்க்கல. என் பேரு போட்டிருந்தா எனக்கு சந்தோஷம். நான் இசையமைத்த ‘அழகிய லைலா’ மட்டுமில்ல, ’கொட்டப்பாக்கும்’, ’ஏலேளங்கிளியே’, ’செவ்வந்தி பூவெடுத்து’ பாடல்களெல்லாம் இப்போ ட்ரெண்டிங்கில் இருக்கு” என்கிறார் உற்சாக துள்ளலோடு!

திரையரங்கில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற ‘குருவாயூர் அம்பல்நடையில்’ படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. அதில் நாம் பார்த்தவரையில் தேங்க்ஸ் கார்டு இடம்பெறவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.